'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகாருக்கு உடனடி தீர்வு

பாளையங்கோட்டை இ.பி.காலனி முதலாவது தெருவில் சாலையோரமாக உள்ள குடிநீர் குழாய் வால்வு தொட்டி திறந்து கிடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக அருண் விக்னேஷ் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து அந்த குடிநீர் குழாய் வால்வு தொட்டிக்கு உடனே கான்கிரீட் மூடி அமைத்து சீரமைக்கப்பட்டு உள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

வாறுகாலில் குவிந்த குப்பைகள்

பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை ஆஸ்பத்திரி தெருவில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி எதிரில் உள்ள வாறுகாலில் குப்பைகள் குவிந்து கிடப்பதால், கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே, வாறுகாலை தூர்வாரவும், அப்பகுதியில் போதிய குப்பைத்தொட்டிகள் அமைத்து தினமும் குப்பைகளை முறையாக அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-ராஜா, பாளையங்கோட்டை.

கலையரங்கம் அமைக்கப்படுமா?

மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி 13-வது வார்டு கடம்பன்குளம் அம்மன் கோவில் அருகில் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்காக மேடை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு திறந்தவெளியில் மேடை உள்ளதால், மழைக்காலத்தில் எந்த நிகழ்ச்சியும் நடத்த முடியவில்லை. எனவே, அங்கு கலையரங்கம் அமைத்து தருவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

-மணிகண்டன், கடம்பன்குளம்.

புகார் பெட்டி செய்தி எதிரொலி;

குடிநீர் தொட்டி சீரமைப்பு

தென்காசி மாவட்டம் ஓடைமறிச்சான் பஞ்சாயத்து உடையாம்புளி மெயின் ரோட்டில் உள்ள குடிநீர் தொட்டி பழுதடைந்து பயன்பாடற்ற நிலையில் இருப்பதாக முத்துராமன் என்பவர் அனுப்பிய பதிவு புகார் பெட்டியில் பிரசுசுரமானது. இதையடுத்து அந்த தொட்டியை சீரமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

அருங்காட்சியகத்தின் மீது வளர்ந்த செடிகள்

குற்றாலம் மெயின் அருவிக்கு செல்லும் வழியில் அரசு அருங்காட்சியகம் உள்ளது. பழமைவாய்ந்த இந்த கட்டிடத்தின் மீது செடிகள் வளர்ந்துள்ளதால், கட்டிடம் வலுவிழக்கும் அபாயம் உள்ளது. எனவே செடிகளை அகற்றி, அருங்காட்சியகத்தை முறையாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

-சீமான், வாசுதேவநல்லூர்.

சாலையில் தேங்கும் கழிவுநீர்

கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து அம்பாநகர் 2-வது தெருவில் வாறுகால் வசதி அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்குவதால், சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, அங்கு வாறுகால் வசதி அமைப்பதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

-அம்ஜத், முதலியார்பட்டி.

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

கடையம் யூனியன் சேர்வைகாரன்பட்டி பஞ்சாயத்து தங்கம்மன் கோவில் தெருவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக தண்ணீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதுடன் சாலையும் சேதமடையும் நிலை உள்ளது. எனவே, குழாய் உடைப்பை சரி செய்து, சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-திருக்குமரன், கடையம்.

குடிநீர் குழாய் வால்வு தொட்டிக்கு மூடி அவசியம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி- எட்டயபுரம் ரோட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் சாலையோரம் குடிநீர் குழாய் வால்வு தொட்டி திறந்து கிடக்கிறது. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, குடிநீர் குழாய் வால்வு தொட்டிக்கு கான்கிரீட் மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

-பாலமுருகன், கோவில்பட்டி.

சேதமடைந்த மின்கம்பங்கள்

கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்து அன்னை தெரசா நகர் முதலாவது தெருவில் உள்ள 2 மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. மின்கம்பங்களின் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பங்கள் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு, புதிய மின்கம்பங்கள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

-கார்த்திக் ராஜா, அன்னை தெரசா நகர்.


Next Story