'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

`தினந்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகாருக்கு உடனடி தீர்வு

தென்காசி மாவட்டம் தென்காசி-அம்பை மெயின்ரோட்டில் கடையம் கால்நடை மருத்துவமனை அருகில் பழைய பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அமைக்கப்பட்ட சர்வீஸ் சாலை குறுகலாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். மேலும் கழிவுநீர் தேங்கி வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் இருப்பதாக கடையம் திருக்குமரன் அனுப்பிய பதிவு `தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரம் ஆனது. இதில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தேங்கிய கழிவுநீரை அகற்றி உள்ளனர். ேகாரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த `தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

காங்கிரீட் மூடி தேவை

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஆசூரா கீழத்தெருவில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இதில் ஒரு இடத்தில் மேல்பகுதியில் காங்கிரீட் உடைந்து விட்டதால் அந்த இடத்தில் இரும்பு கம்பிகளுடன் கூடிய மூடி போட்டு மூடி இருந்தனர். தற்போது அந்த மூடி சேதம் அடைந்து மேலே தூக்கியபடி உள்ளது. இதனால் அந்த பகுதியில் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் அதன் மீது மோதி விபத்துக்குள்ளாகி பாதிக்கப்படுகிறார்கள். எனவே அந்த மூடியை அகற்றிவிட்டு காங்கிரீட் மூடி அமைக்க வேண்டும்.

-காதர் மீரான், மேலப்பாளையம்.

மீண்டும் பஸ் இயக்க வேண்டும்

நாங்குநேரி தாலுகாவில் உள்ள மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி வேகமாக வளர்ந்து வரும் நகரம் ஆகும். இந்த ஊரில் இருந்து தினமும் வேலைக்கு வெளியூர் சென்று வரக்கூடியவர்கள் அதிகம் பேர் உள்ளனர். நெல்லை சந்திப்பு வழியாக இரவு 9.50 மணியளவில் புறப்படும் அரசு டவுன் பஸ் இரவு 10.30 மணிக்கு மூலைக்கரைப்பட்டிக்கு வந்து சேரும். கடந்த சில மாதங்களாக இந்த பஸ் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்.

-கொம்பையா, மூலைக்கரைப்பட்டி.

சீரமைக்கப்படாத கழிவுநீர் கால்வாய்

நெல்லை மாவட்டம் பத்தமடை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முன்பு தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது அவ்வாறு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. எனவே தினமும் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். மேலும் குடிநீரும் கலங்கியபடி வருகிறது. பத்தமடை 5-வது வார்டு நேருஜி தெருவில் கழிவுநீர் கால்வாய் நிரம்பி வெளியேறுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதாரம் இல்லாத நிலை உள்ளது. இதை சீரமைக்க வேண்டும்.

-கவாஸ்கர், பத்தமடை.

போக்குவரத்து நெரிசல்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பிரானூர் பார்டரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. மேலும் கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையாக இது அமைந்துள்ளது. எனவே போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜீவ்காந்தி, செங்கோட்டை.

பழுதடைந்த தடுப்புச்சுவர்

கடையம் யூனியன் வீராசமுத்திரம் பஞ்சாயத்து மாலிக்நகரில் ராமநதி ஆற்றுப்பாலம் உள்ளது. இந்த பாலத்தில் இருபுறமும் உள்ள தடுப்புச்சுவர் பல ஆண்டுகளாக முறையாக பராமரிப்பு இல்லாததால் சிமெண்டு காங்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து அதில் உள்ள இரும்பு கம்பிகள் துருப்பிடித்து தடுப்புச்சுவர் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இந்த பாலத்தின் கீழ்பகுதியில் தினமும் ஏராளமானவர்கள் குளித்து வருகிறார்கள். எனவே அந்த பாலத்தில் இருபுறமும் பழுதடைந்த நிலையில் உள்ள தடுப்புச்சுவரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அம்ஜத், முதலியார்பட்டி.

பயணிகள் நிழற்குடை தேவை

வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் காமராஜர் நகர் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லை. இதனால் சங்கரன்கோவில் மற்றும் ஆலங்குளம் செல்லும் பயணிகள், கடும் வெயில் மற்றும் மழைக்காலங்களில் அங்கு நின்று அவதிப்படுகிறார்கள். எனவே பயணிகள் காத்திருக்க நிழற்குடை அமைக்க வேண்டும்.

-கணேசன், கீழக்கலங்கல்.

குப்பையால் சுகாதார சீர்கேடு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி பைபாஸ் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடாக உள்ளது. இதனால் மக்கள் முகம் சுளித்தப்படி செல்கிறார்கள். எனவே குப்பைகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், கோவில்பட்டி.


Next Story