கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பாலை ரோட்டில் கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம்


கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பாலை ரோட்டில் கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம்
x

கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி ரோட்டில் பாலை கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

ஆவின் நிறுவனத்துக்கு விவசாயிகள் வழங்கும் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு பசும்பாலுக்கு ரூ.35-ல் இருந்து ரூ.42 ஆகவும், எருமைப்பாலுக்கு ரூ.44-ல் இருந்து ரூ.51 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் கடந்த 10-ந் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் 17-ந் தேதிக்குள் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் ஆவினுக்கு பால் வழங்குவதை நிறுத்தி கால்நடைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அறிவித்திருந்தனர்.

பேச்சுவார்த்தை தோல்வி

இதற்கிடையில் நேற்று முன்தினம் தமிழக பால் வளத்துறை அமைச்சரிடம், பால் உற்பத்தியாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனால் நேற்று பால் உற்பத்தியாளர்கள் ஆவினுக்கு பால் வழங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பவானி அருகே உள்ள நசியனூர் ராயபாளையம் பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் முன்பு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில பொருளாளர் ராமசாமி தலைமையில் பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் திரண்டனர்.

பாலை ரோட்டில் கொட்டி...

பின்னர் அவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி தரக்கோரி, தாங்கள் கொண்டு வந்திருந்த பாலை ரோட்டில் கொட்டி போராட்டம் நடத்தினர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பால் உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைந்து போகச்செய்தனர். இந்த போராட்டம் காரணமாக சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நெல்லையில்...

நெல்லை தச்சநல்லூரில் ஆவினுக்கு பால் அனுப்ப மறுத்து உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் பால் கறந்து பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்தனர்.

சேலம் மாவட்டம் பாகல்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் பாகல்பட்டி பால் கூட்டுறவு சங்கத்தில் பாலை ஊற்றாமல் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாழப்பாடி புதுப்பாளையம் பால் உற்பத்தியாளர் சங்கத்தில் கருப்புக்கொடி கட்டி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாதம்பட்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் ஒட்டப்பட்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் என 2 இடங்களில் போராட்டம் நடந்தது.


Next Story