அந்தியூர் அருகே பவானி ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு; மற்றொருவர் கதி என்ன?


அந்தியூர் அருகே பவானி ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு; மற்றொருவர் கதி என்ன?
x
தினத்தந்தி 6 Jun 2023 9:11 PM GMT (Updated: 7 Jun 2023 6:28 AM GMT)

அந்தியூர் அருகே பவானி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார். மற்றொருவர் கதி? என்ன என்பது தெரியவில்லை.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் அருகே பவானி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார். மற்றொருவர் கதி? என்ன என்பது தெரியவில்லை.

ஆற்றில் இறங்கி குளித்தனர்

அந்தியூர் அருகே உள்ள புதுமேட்டூ்ர் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் சின்னதுரை (வயது 45), மோகன்ராஜ் (45), ரவி (44). இவர்கள் 3 பேரும் செங்கல் சூளையில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். அந்தியூரை அடுத்த அத்தாணி கருள்வாடி புதூர் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் குளிப்பதற்காக நேற்று மதியம் இவர்கள் 3 பேரும் சென்று உள்ளனர்.

சின்னத்துரையும், மோகன்ராஜும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். நீச்சல் தெரியாததால் ஆற்றின் கரையில் ரவி நின்று கொண்டார்.

ஒருவர் உடல் மீட்பு

குளித்துக்கொண்டிருந்த சின்னத்துரையும், மோகன்ராஜும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் 2 பேரும் ஆற்றில் மூழ்க தொடங்கினர். மேலும் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் தத்தளித்தபடி தங்களை காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்பினர். இதை கண்டதும் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் விரைந்து சென்று 2 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனே இதுகுறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கும், ஆப்பக்கூடல் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் தெரிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் சின்னத்துரையின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதையடுத்து சின்னத்துரையின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இருட்டிவிட்டதால் தேடும் பணியை தீயணைப்பு வீரர்கள் நிறுத்திவிட்டனர். இதனால் மோகன்ராஜின் கதி என்ன? என்ன என்று தெரியவில்லை. மீண்டும் இன்று (புதன்கிழமை) தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட உள்ளனர்.


Related Tags :
Next Story