பவானி ஆற்றில் மூழ்கி பலியான தொழிலாளி உடல் மீட்பு
பவானி ஆற்றில் மூழ்கி பலியான தொழிலாளி உடல் மீட்பு
அந்தியூர்
அந்தியூர் அருகே உள்ள புதுமேட்டூர் காலனியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 44). செங்கல் சூளை தொழிலாளி. இவருடைய உறவினர் சின்ராஜ். இருவரும் நேற்று முன்தினம் அந்தியூர் அருகே உள்ள கருல்வாடிபுதூர் பவானி ஆற்றில் குளித்துக்கொண்டு இருக்கும்போது ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர். இதனால் இருவரும் தண்ணீரில் மூழ்கிவிட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆற்றில் இறங்கி தேடினர். இதில் சின்ராஜின் உடலை மீட்டனர். மோகன்ராஜின் உடல் கிடைக்கவில்லை. இரவு நேரமாகிவிட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் நேற்று காலை மீண்டும் தேடும் பணி நடந்தது. அப்போது அவர்கள் குளித்த இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மோகன்ராஜின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மோகன்ராஜின் உடல் அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.