ரியல் எஸ்டேட் அதிபரின் மகன் பலி; 6 பேர் படுகாயம்


ரியல் எஸ்டேட் அதிபரின் மகன் பலி; 6 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 22 May 2023 6:45 PM GMT (Updated: 22 May 2023 6:45 PM GMT)

கடலூரில் கார் மீது லாரி மோதியதில் ரியல் எஸ்டேட் அதிபரின் மகன் பலியானான். 6 பேர் படுகாயமடைந்தனர். சுற்றுலா சென்று விட்டு திரும்பி வந்தபோது நிகழ்ந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

கடலூர்

கடலூர் முதுநகர்:

புதுச்சேரி மாநிலம் முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் மாயக்கண்ணன்(வயது 47). ரியல் எஸ்டேட் அதிபரான இவர், நேற்று காலை தனது குடும்பத்துடன் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா தளத்துக்கு சென்றார்.

இவருடன், மனைவி சீதாலட்சுமி (38), மகன்கள் அறிவுக்கரசு(12), அன்புக்கரசு(8), தங்கை மகன் நிரஜா (15), மற்றொரு தங்கை மகன் ரவீந்தர் (15), அண்ணன் மகன் ஜெய்கணேஷ் (14) ஆகியோர் காரில் சென்றனர். அங்கு படகு சவாரி செய்து பொழுதை கழித்துவிட்டு மாலையில் மீண்டும் புதுச்சேரிக்கு புறப்பட்டனர்.

சிறுவன் பலி

சிதம்பரம்- கடலூர் சாலையில் கடலூர் சிப்காட் தீயணைப்பு நிலையம் அருகில் வந்தபோது, எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் மாயக்கண்ணன் மகன் அன்புக்கரசு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானான். மற்ற 6 பேரும் படுகாயமடைந்தனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லாரி டிரைவர் ஓட்டம்

இதனிடையே அன்புக்கரசுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது. விபத்தில் பலியான அன்புக்கரசு புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து நிகழ்ந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.


Next Story