பர்கூர் அருகே சோகம்தொட்டிலில் விளையாடியபோது கழுத்து இறுகி குழந்தை சாவு
பர்கூர்
பர்கூர் அருகே தொட்டிலில் விளையாடியபோது கழுத்து இறுகி குழந்தை பரிதாபமாக இறந்தது.
மூச்சு திணறி...
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள குமரனங்கனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் பெங்களூருவில் தங்கி அங்குள்ள பேக்கரியில் ஸ்வீட் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சசிகலா. இவர்களுக்கு 3½ வயதில் ரித்திகா என்ற பெண் குழந்தை இருந்தது. நிறைமாத கர்ப்பிணியான சசிகலா கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார்.
இதனால் குழந்தை ரித்திகா பாட்டியுடன் இருந்தது. அப்போது குழந்தையை புடவையால் தொட்டில் கட்டி அவரது பாட்டி தூங்க வைத்துள்ளார். பின்பு ரித்திகா விழித்துக் கொண்டு தொட்டிலில் விளையாடிய போது கழுத்து இறுக்கி கொண்டு மூச்சு திணறி மயக்க நிலையில் இருந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பாட்டி சத்தம் போட்டார்.
குழந்தை சாவு
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து குழந்தையை மீட்டு பர்கூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பர்கூர் போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தை இறந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூழியில் விளையாடிய கழுத்து இறுக்கி குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.