கிரிவலப்பாதை வனப்பகுதியில் மான்கள் பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும்-சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


கிரிவலப்பாதை வனப்பகுதியில் மான்கள் பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும்-சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
x

திருவண்ணாமலையில் கிரிவலப்பாதை வனப்பகுதியில் மான்கள் பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கிரிவலப்பாதை வனப்பகுதியில் மான்கள் பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கிரிவலப்பாதை காப்புக்காடு

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையை சிவனாக எண்ணி பவுர்ணமி உள்ளிட்ட விஷேச நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.

14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு அடர்ந்த காப்புக் காடு உள்ளது. இந்த வனப்பகுதியில் பல்வேறு மூலிகை மரங்களும், மூலிகை செடி, கொடிகளும் உள்ளதால் இயற்கை காற்றை சுவாசிப்பதற்காகவும் பலர் கிரிவலப்பாதைக்கு வந்து செல்வது வழக்கம். இந்த 10 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட காப்பு காட்டுப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான மான்கள், மயில்கள், காட்டுப்பன்றிகள் வசித்து வருகின்றன.

மான்கள், குரங்குகள்...

சமீப நாட்களாக வனப்பகுதிக்கு உள் இருந்த மான்கள் கூட்டமாக வனப்பகுதியின் எல்லையில் அமைக்கப்பட்டு உள்ள இரும்பு வேலி வரை வருகின்றன. கிரிவலம் செல்லும் பக்தர்கள் மான்களுக்கும், குரங்குகளுக்கும் பிஸ்கெட், பன், காய், கனிகளை வாங்கி கொடுகின்றனர்.

இதனால் சுயமாக உணவு தேடும் பழக்கத்தை மறந்து அந்த இடத்திற்கு மான்கள் வருகின்றன. கிரிவலப் பாதையில் பழனி ஆண்டவர் கோவில் உள்ள வனப்பகுதியில் காலை மற்றும் மதிய வேளைகளில் மான்கள் கூட்டமாக வந்து நிற்கின்றன.

மக்களை கண்டதும் ஓடிவிடும் மான்கள் அவர்கள் கையை நீட்டியதும் உணவு பொருட்கள் தருகின்றனர் என்று அச்சமின்றி அருகில் வருகின்றன.

மான்கள் இறப்பு

இந்த நிலையில் கிரிவலப்பாதையில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வேலிகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. சில இடங்களில் நாய்கள் உள்ளே நுழைந்து செல்லும் அளவிற்கு வேலியில் இடைவெளிகள் உள்ளன. இதனால் வேலியில் உள்ள அந்த இடைவெளியின் வழியாக நாய்கள் வனப்பகுதிக்குள் சென்று தண்ணீர் மற்றும் உணவு தேடி கிரிவலப்பாதை ஓரம் வருகிற மான்களை துரத்தி அடித்து கொன்று விடுவது தொடர் கதையாக நடைபெற்று வருகின்றது.

கடந்த வாரத்தில் கூட தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த 2 மான்களை நாய்கள் கடித்து குதறியதால் அவை இறந்தன.

பாதுகாப்பு மையம் வேண்டும்

இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி சட்டமன்றத்தில் திண்டுக்கல்லில் தேவாங்கு பாதுகாப்பு மையமும், தஞ்சை மாவட்டத்தில் கடற்பசு பாதுகாப்பு மையமும் அமைக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில் எண்ணற்ற மான்கள் உள்ளன. அவற்றை பாதுகாக்க திருவண்ணாமலை வனக் கோட்டத்தில் மான்கள் பாதுகாப்பு மையம் அமைத்தால் இங்குள்ள மான்கள் பாதுகாக்கப்படும்.

தேவையின்றி வனப்பகுதியில் இருந்து வெளியேறி அவை இறப்பது தவிர்க்கப்படும். மேலும் மான்கள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படுவதினால் அவை வேட்டையாடுவது முற்றிலுமாக தவிர்க்கப்படும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திருவண்ணாமலை மான்கள் பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியை சுற்றி முறையாக வேலி அமைக்க வேண்டும் என்றும், நாய்கள் உள்ளே புகாத வகையில் வேலி உள்ள இடைவெளிகளை சரி செய்ய வேண்டும் என்றும், தண்ணீர், உணவிற்கான வசதியை ஏற்படுத்தி அவற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.



Next Story