தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திருப்பத்தூர் கூடுதல் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் எஸ்.தண்டபாணி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சிவசீலன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை மாநில துணைத்தலைவர் எஸ்.ஜோதி தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் கேங்மேன் பயிற்சி பணியாளர்களுக்கு சொந்த மாவட்டங்களுக்கு விருப்ப இடமாறுதல் வழங்க வேண்டும், விடுப்பு, பயணப்படி சலுகைகள் வழங்க வேண்டும், பணி வரையறை செய்து உத்தரவு வழங்க வேண்டும், கள உதவியாளராக பதவி மாற்றம் செய்ய வேண்டும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி முறையாக பாதுகாப்பு வகுப்பு நடத்த வேண்டும், விடுமுறை நாட்களில் கட்டாயமாக பணிக்கு வர வேண்டும் என்று நிர்பந்தம் செய்வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
வட்ட செயலாளர் கே.சந்திரசேகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினார்கள். கேங்மேன் பயிற்சி பணியாளர்கள், தமிழ்நாடு ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் ஆர்வெங்கடேசன் நன்றி கூறினார்.