புரட்டாசி மாத மகாளயபட்சம்:ராமேசுவரம், தனுஷ்கோடியில் நீராடி தர்ப்பணம் செய்ய குவியும் பக்தர்கள்


புரட்டாசி மாத மகாளயபட்சம்:ராமேசுவரம், தனுஷ்கோடியில் நீராடி தர்ப்பணம் செய்ய குவியும் பக்தர்கள்
x
தினத்தந்தி 9 Oct 2023 6:45 PM GMT (Updated: 9 Oct 2023 6:46 PM GMT)

புரட்டாசி மாத மகாளய பட்சம் நடந்து வருவதை முன்னிட்டு ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி கடலில் புனித நீராட திதி, தர்ப்பணம் செய்ய பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் கோவிலுக்கு ஆடி மற்றும் தை அமாவாசை மற்றும் புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். குறிப்பாக இந்த அமாவாசை நாட்களில் ராமேசுவரம் வந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து திதி, தர்ப்பண பூஜை செய்து வழிபட்டால் இறந்து போன தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக புரட்டாசி மாத மகாளய அமாவாசை என்பது திதி, தர்ப்பண சிவலிங்க பூஜை செய்வதற்கு உகந்தது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் 15 நாட்கள் இந்த மகாளய பட்சம் இருக்கும். இந்த ஆண்டு புரட்டாசி மகாளய பட்சம் கடந்த மாதம் 29-ந் தேதி அன்று தொடங்கியது. வருகின்ற 14-ம் தேதி அமாவாசை வரை மகாளய பட்சம் உள்ளது.

புனித நீராடல்

இந்தநிலையில் புரட்டாசி மாத மகாளய பட்சம் கடந்த 29-ந் தேதியில் இருந்து தொடங்கியதில் இருந்தே ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிக்கு திதி, தர்ப்பணம், சங்கல்ப பூஜை செய்ய தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

குறிப்பாக தற்போது தனுஷ்கோடி சென்று கடலில் புனித நீராடி அங்கு கடற்கரையில் அமர்ந்து புரோகிதர்கள் மூலமும் ஏராளமான பக்தர்கள் திதி, தர்ப்பணம் செய்து வருகின்றனர். தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை சாலை வசதி வந்த பின்னர் ஏராளமான பக்தர்கள் தனுஷ்கோடி சென்று கடலில் நீராடி கடற்கரையில் அமர்ந்து திதி, தர்ப்பணம் செய்து வருகின்றனர்.

இதுபற்றி ராமேசுவரம் புரோகிதர் ராமச்சந்திரன் கூறும் போது, ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் 15 நாட்கள் மகாளய பட்சம் கடைபிடிக்கப்படும். இந்த ஆண்டு கடந்த செப்டம்பர் 29-ந் தேதி மகாளய பட்சம் தொடங்கியது. வருகிற 14-ந் தேதி அமாவாசை வரை இந்த மகாளய பட்சம் உள்ளது. இந்த மகாளய பட்சம் நாட்களில் கடலில் நீராடி திதி, தர்ப்பணம் செய்து வழிபட்டால் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்றார்.


Next Story