விடுமுறை நாளையொட்டி திருத்தணி, பெரியபாளையம் கோவில்களில் குவிந்த பக்தர்கள்


விடுமுறை நாளையொட்டி திருத்தணி, பெரியபாளையம் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
x

விடுமுறை நாளையொட்டி திருத்தணி முருகன் கோவில் மற்றும் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.

திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான கோவில் மலைமேல் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினந்தோறும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம்.

இந்தநிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

3 மணி நேரம் காத்திருந்தனர்

இதனால், பொதுவழியில், பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். அதே போல் ரூ.100 தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

மூலவருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் மற்றும் தீபாராதனை நடந்தது.

பெரியபாளையம் கோவில்

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் புகழ்பெற்ற பவானி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று 6-வது வார ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் கோவிலில் சிறப்பு தரிசன கட்டணமான ரூ.100, ரூ.30 மற்றும் தர்ம தரிசனம் உள்ளிட்ட வரிசைகளில் பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மேலும், அதிகாலை மூலவர் சுயம்பு அம்மனுக்கு மகாபிஷேகம், விசேஷ அலங்காரம், ஜோதி தரிசனம், உற்சவர் பவானி அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது.

பின்னர், உற்சவர் உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது. மாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு ஒரே நேரத்தில் பல்வேறு வாகனங்களில் வந்ததால் பெரியபாளையம்-சென்னை நெடுஞ்சாலை, பெரியபாளையம்-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை, பெரியபாளையம்-ஆரணி நெடுஞ்சாலை உள்ளிட்ட 3 சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story