திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் புதன்கிழமை குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் நேற்று குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
பங்குனி உத்திர திருவிழா
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. 6 மணிக்கு கோவிலில் இருந்து வள்ளி அம்பாள் தபசுக்காக, ஆனந்தவல்லி சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினார்.
தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி
பின்னர் மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் கோவிலில் இருந்து தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக சிவகொழுந்தீஸ்வரர் கோவிலுக்கு சென்று அம்பாளுக்கு காட்சி கொடுத்தார்.
தொடர்ந்து சுவாமி-அம்பாள் கீழ ரதவீதி பந்தல் மண்டபம் முகப்பிற்கு சென்றனர். அங்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சுவாமி- அம்பாள் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி கொடுத்துவிட்டு கோவிலை சேர்ந்தனர்.
திருக்கல்யாணம்
இரவில் கோவிலில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நடந்தது.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம், காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.
குன்றுமேலய்யன் சாஸ்தா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான கீழநாலுமூலைக்கிணறு குன்றுமேலய்யன் சாஸ்தா கோவிலிலும் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
---------------