திண்ணக்கோணம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தலைவர் வெளிநடப்பு


திண்ணக்கோணம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தலைவர் வெளிநடப்பு
x

திண்ணக்கோணம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தலைவர் வெளிநடப்பு செய்தார்.

திருச்சி

முசிறி:

முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள திண்ணக்கோணம் ஊராட்சியின் கிராம சபை கூட்டம், வீரமணிப்பட்டியில் நடந்தது. கூட்டத்தின்போது, ஊராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு பகுதியில் குடிநீர், தெரு விளக்கு வசதி இல்லை என்று பொதுமக்களும், வார்டு உறுப்பினரும் புகார் தெரிவித்தனர். இதேபோல் 8-வது வார்டு பகுதியில் மின்விளக்கு வசதி இல்லாததால், வீட்டுக்குள் விஷஜந்துக்கள் புகுந்து விடுவதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகவும், அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் வார்டு உறுப்பினர் புகார் தெரிவித்தனர். மேலும் ஊராட்சி தலைவர், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற முயற்சிப்பதில்லை என்றும் பொதுமக்கள் புகார் கூறினர். அதனை கேட்டுக்கொண்டிருந்த ஊராட்சி தலைவர் ரஞ்சிதா, பதில் ஏதும் கூறாமல் திடீரென கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் கடந்த முறை நாச்சம்பட்டியில் நடந்த கூட்டத்தின்போதும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் புகார் தெரிவித்தபோது, திடீரென ஊராட்சி தலைவர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் வெள்ளூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி பகுதிகளில் நெடுங்காலமாக பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதாகவும், குறிப்பாக தண்ணீர், சாலை, மின்விளக்கு வசதி இல்லை என்றும், 100 நாள் வேலை திட்டத்தில் பணிகள் சரியாக நடப்பதில்லை, வாரியை அகலப்படுத்தும் பணிகள் நடக்கவில்லை, பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு தலைவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் ஊராட்சி தலைவர் கண்ணையன் மீது புகார் தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் வார்டு உறுப்பினர்கள் கூறுகையில், உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் துணைத் தலைவர் கலந்து கொள்ளவில்லை. இந்த மாதத்திலேயே மற்றொரு கூட்டம் நடத்த வேண்டும். அப்போதுதான் தீர்மான புத்தகத்தில் கையெழுத்திடுவோம் என்று கூறி, சில வார்டு உறுப்பினர்கள் தீர்மான புத்தகத்தில் கையெழுத்து போடாமல், மறுப்பு தெரிவித்து வந்துள்ளதாக, தெரிவித்தனர்.


Next Story