மாற்றுத்திறனாளி குழந்தைகள் இன்பச் சுற்றுலா
தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில், மாற்றுத்திறனாளி குழந்தைகளை அவர்களின் பெற்றோருடன் இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது. இந்த சுற்றுலா பயணம் தொடக்க நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷஜீவனா இந்த சுற்றுலா பயணத்தை தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், " தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களது கல்வி மற்றும் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மனவளர்ச்சிகுன்றியோருக்கான ஆரம்ப கால பயிற்சி பெற்று வரும் 3 வயது முதல் 6 வயது வரை உள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மற்றும் காதுகேளாதோர் ஆரம்ப கால பயிற்சி மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் என 51 பேர் பஸ் மூலம் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்கள் வைகை அணை, பென்னிகுயிக் மணிமண்டபம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்" என்றார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) சீனிவாசன், மாவட்ட சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.