விருதுநகர் மாவட்ட ஆவின் நிர்வாக குழு கலைப்பு
விருதுநகர் மாவட்ட ஆவின் நிர்வாக குழு கலைப்பு
விருதுநகர் மாவட்ட ஆவின் நிர்வாகக் குழு கலைக்கப்பட்டு செயலாட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார்.
விசாரணை அறிக்கை
விருதுநகர் மாவட்ட ஆவின் நிர்வாக குழு ஸ்ரீவில்லிபுத்தூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிர்வாக குழுவிற்கு கடந்த 2018-ம் ஆண்டு தலைவர், துணைத்தலைவர் மற்றும் 17 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 2020-2021-ம் ஆண்டில் மேலாளர், துணை மேலாளர் உள்பட 25 பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர், இந்த நியமனம் குறித்து பால்வளத்துறை ஆணையருக்கு புகார்கள் அனுப்பப்பட்டன. இந்த பணி நியமன முறைகேடு குறித்து விசாரணை நடத்த கடந்த பிப்ரவரி 2022-ம் தேதி பால்வளத்துறை ஆணையர் உத்தரவிட்டார்.
அதன்படி மாவட்ட பால்வளத்துறை சார்பதிவாளர் விசாரணை நடத்தி கடந்த டிசம்பர் 28-ந் தேதி, பால்வளத்துறை ஆணையருக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.
கலைப்பு
அதன் அடிப்படையில் ஆவின் நிர்வாகத்தில் முறைகேடாக நியமிக்கப்பட்ட 25 நியமனங்களை ரத்து செய்ய ஆவின் பொதுமேலாளருக்கு பால்வளத்துறை ஆணையர் உத்தரவிட்டார். அதன் பேரில் அந்த நியமனங்கள் ரத்து செய்யப்பட்டன.
ேமலும் பால்வளத்துறை ஆணையர் சுப்பையன் ஆவின் நிர்வாகக்குழுவை கலைத்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட ஆவின் நிர்வாகத்திற்கு செயலாட்சியராக கலெக்டர் ஜெயசீலன் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.