தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்


தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
x

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து திருப்பத்தூரில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பத்தூர்

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து திருப்பத்தூரில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கண்டன ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க. முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு போட்ட தமிழக அரசை கண்டித்து திருப்பத்தூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் டி.டி.குமார் வரவேற்று பேசினார்.

அப்போது தமிழகத்தில் 4½ ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு போடப்பட்டதை கண்டிக்கின்றோம், தமிழகத்தில் எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கும் தி.மு.க. அரசை கண்டிக்கின்றோம். மீண்டும் அ.தி.மு.க. எழுச்சி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என அவர் பேசினார்.

மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி தலைமை தாங்கி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

அழிக்க முடியாது

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது தி.மு.க. அரசு 7 பிரிவுகளில் பொய் வழக்கு போட்டுள்ளது. அதில் இதுவரை தமிழகத்தில் எந்த எதிர்க்கட்சித் தலைவர் மீதும் போடப்படாத வழிப்பறி கொள்ளை என்ற பிரிவில் வழக்கு போடப்பட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழகத்தில் 4½ ஆண்டு காலம் சிறப்பான ஜெயலலிதா ஆட்சியை நடத்தி வந்த எடப்பாடி பழனிசாமியை பழிவாங்கும் தி.மு.க. அரசின் இந்த செயலை மிக வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்க்கட்சிகளை அழிக்க நினைப்பதில் கவனம் செலுத்தக்கூடாது. பொய் வழக்கு போட்டு அ.தி.மு.க.வை அழிக்க முடியாது. அ.தி.மு.க. கடந்த 4½ ஆண்டு காலம் மிகச் சிறப்பான ஆட்சி நடத்தி, அனைத்து தரப்பு பொதுமக்களாலும் பாராட்டப்பட்டது.

எழுச்சிபெறும்

தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை நம்ப வைத்து ஆட்சியில் அமர்ந்து உள்ளார்கள். நீட் தேர்வு ரத்து, பெண்களுக்கு மாதம் ஆயிரம் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. அரசு அலுவலர்கள் எப்போதும் தி.மு.க.விற்கு ஆதரவாக இருப்பவர்கள் தற்போது அனைத்து அரசு அலுவலர்களும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறார்கள். வருங்காலங்களில் அ.திமு.க. எழுச்சி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.- பாஜ.க. உறவு

பொய் வழக்கு போட்டு அ.தி.மு.க.வை அழிக்க முடியாது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. தினமும் பட்டியில் அடைத்துவைத்து தேவையானவற்றை கொடுத்து வெற்றி பெற்றார்கள். அ.தி.மு.க., பா.ஜ.க. உறவு நல்ல முறையில் உள்ளது. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று உள்ளது. விரைவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார். அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொடர்ந்து மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கின்ற இயக்கம். மாற்றுக் கட்சியில் இருந்து தொடர்ந்து அ.தி.மு.க.வில் இணைந்து வருகிறார்கள். வரும் தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அரசு வழக்கறிஞர் டெல்லி பாபு கோஷங்களை எழுப்பினார். அப்போது தி.மு.க. அரசே பொய் வழக்கு போடாதே, வாபஸ் பெறு, திரும்பப் பெறு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீதுபோடப்பட்ட வழக்கை வாபஸ் பெறு என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.

வாணியம்பாடி தொகுதி ஜி.செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.ஜி.ரமேஷ், கோ.வி.சம்பத்குமார், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், மாவட்ட இணைச்செயலாளர் டாக்டர் லீலா சுப்ரமணியம், நகர செயலாளர்கள் சீனிவாசன், சதாசிவம், ஒன்றிய செயலாளர் டாக்டர் என்.திருப்பதி, சி.செல்வம், ஆர்.ரமேஷ், சாம்ராஜ், ஜோதி ராமலிங்கம், கே.எம்.சுப்பிரமணியம், டி.டி.சி.சங்கர், ஆர்.நாகேந்திரன், தம்பாகிருஷ்ணன், ஆர்.ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர்கள் டாக்டர் திருப்பதி, யுவராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் அவைத்தலைவர் ஜி.ரங்கநாதன் நன்றி கூறினார்.


Next Story