காவிரி பிரச்சினையில் தமிழக உரிமைகளை தி.மு.க. அரசு விட்டுக்கொடுக்கிறது -அண்ணாமலை குற்றச்சாட்டு
காவிரி பிரச்சினையில் அரசியல் லாபத்திற்காக தமிழக உரிமைகளை தி.மு.க. அரசு விட்டுக்கொடுக்கிறது என அண்ணாமலை கூறினார்.
மதுரை,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளத்தில் காமராஜர் பொற்கால ஆட்சியின் சாதனை மலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. காமராஜர் மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. கலந்து கொண்டு காமராஜர் பொற்கால ஆட்சி சாதனை மலரை வெளியிட அதை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பெற்றுக்கொண்டார்.
இதைதொடர்ந்து அண்ணாமலை பேசியதாவது:-
காமராஜரின் 121-வது பிறந்தநாள் கொண்டாடும் இந்த தருணத்தில் காமராஜர் ஆட்சி கொண்டுவர வேண்டுமானால் காமராஜரின் நற்குணம் நம்மிடம் வேண்டும். அதற்கு சுயபரிசோதனை வேண்டும். காமராஜர் முதல் கேபினட் அமைச்சரவையிலேயே சமூக நீதியை நிலை நிறுத்தியவர். அதேபோல சமூக நீதியை காப்பவர்தான் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் மோடிக்கும், காமராஜருக்கும் ஒற்றுமை இருக்கிறது. தமிழகத்தில் அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் வந்தால் சமுதாய மாற்றம் வந்துவிடும். காமராஜர் ஆட்சிக்கு பிறகு சொல்லும்படியாக தொழிற்சாலைகள் உருவாகவில்லை.
மீண்டும் பிரதமர் மோடிதான்
காமராஜர் ஆட்சி காலத்தில் அமைச்சர்களிடம் நேர்மை இருந்தது. ஆனால் இன்றைய தமிழக அமைச்சர்களிடம் இல்லை. அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு இலாகா இல்லாத அமைச்சருக்கு மக்களின் வரி பணம் போகிறது. செந்தில் பாலாஜிக்கு சொத்தை விற்று வேலைக்கு பணம் கொடுத்தவர்களின் ஏழ்மையும், கஷ்டமும்தான். நீதிபதியின் கண் முன் நின்று இருக்கிறது.
காமராஜர் ஆட்சிக்கு பிறகு 22 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்துக்கு பிரதமர் மோடியால் 11 மருத்துவ கல்லூரி வந்துள்ளது. பா.ஜ.க.வை நோக்கி இளைஞர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். 3-வது முறையாக பிரதமராக மோடி வருவது உறுதி. தமிழகத்திலும் மாற்றம் வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அரசியல் லாபம்
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-
வருகிற 23-ந் தேதி பா.ஜ.க. சார்பில் தமிழகம் முழுவதும் 1,200 பஞ்சாயத்துகளில் 5 கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டோம் என்று கூறும் காங்கிரஸ் முதல்-மந்திரி, துணை மந்திரி மீது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கண்டன குரலை பதிவு செய்யாமல் வந்தால் வருகிற 18-ந் தேதி பா.ஜ.க. சார்பில் கருப்புக்கொடி போராட்டம் தமிழகம் முழுவதும் நடத்துவோம்.
அமைச்சர் துரைமுருகன் அரசியல் சந்தர்ப்பவாத கூட்டணிக்காக கர்நாடகா மீது ஒரு கண்டன குரலை கூட எழுப்பவில்லை. தமிழகத்தின் உரிமைகளை அரசியல் லாபத்திற்காக தி.மு.க. அரசு விட்டுக்கொடுக்கிறது. சண்டை போட வேண்டாம். தமிழக மக்களின் குரலாக முதல்-அமைச்சரின் குரல் இல்லையே என்பதுதான் எங்களுடைய வருத்தம்.
இவ்வாறு அவர் கூறினார்.