மீனவர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியில் எதையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை -அண்ணாமலை குற்றச்சாட்டு
மீனவர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியில் எதையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை என பாதயாத்திரையில் அண்ணாமலை கூறினார்.
நாகர்கோவில்,
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் கடந்த மாதம் 28-ந் தேதி ராமேசுவரத்தில் இருந்து பாதயாத்திரை தொடங்கினார். மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதயாத்திரையை முடித்த அவர் தற்போது குமரி மாவட்டத்தில் மேற்கொண்டுள்ளனர்.
அங்கு நேற்று 3-வது நாளாக அவர் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் இருந்து காலை 10.05 மணிக்கு பாதயாத்திரையை தொடங்கினார். அங்கிருந்து பால்பண்ணை சந்திப்பு, கலெக்டர் அலுவலக சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு வழியாக வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு பகல் 12.40 மணிக்கு வந்தடைந்தார். அண்ணாமலைக்கு வழிநெடுகிலும் ஏராளமானோர் நின்று வரவேற்பு அளித்தனர்.
அருகதை கிடையாது
வேப்பமூடு பூங்காவில் பிரசார வாகனத்தில் அண்ணாமலை ஏறி நின்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மதத்தை வைத்து மக்களை பிரித்து முதன்முதலாக குமரியில் அரசியல் செய்தது முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அரசு.
நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு கர்மவீரர் காமராஜர், எம்.ஜி.ஆர். உள்ளிட்ட தலைவர்களை குறிப்பிட்டு பேசினார். இப்படிப்பட்ட தேச பக்தர்கள் இருக்கக்கூய மண்ணில் தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் எ.வ.வேலு பிரிவினைவாதம் பேசிக்கொண்டிருக்கிறார் என்று பேசியிருந்தார். இந்தநிலையில் ராமநாதபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். ஒரு முதல்-அமைச்சர் என்ன பேசக்கூடாது என்பதற்கு இலக்கணமாக அவருடைய பேச்சு இருந்தது. தமிழக பா.ஜனதா கட்சி வேறு, வேறு கட்சிகளில் இருந்து தலைவர்களை கடன் வாங்குகிறார்கள் என்று கூறியுள்ளார். இந்தியாவுக்கே தெரியும் உள்ளொன்று வைத்துக்கொண்டு, புறமொன்று பேசுபவர்கள் தி.மு.க.வினர் தான். எனவே மு.க.ஸ்டாலினுக்கு, பிரதமர் நரேந்திரமோடியைப் பற்றி பேசுவதற்கு அருகதை கிடையாது.
மோடியின் சாதனை
மோடியை எதிர்ப்பதற்காக இந்தியா என்ற பெயரை வைத்து கூட்டணி அமைத்திருக்கிறார்கள். இந்த கூட்டணியில் தி.மு.க. அங்கம் வகிப்பது மிகப்பெரிய காமெடி. மீனவர்களுக்காக தனி அமைச்சரவையை உருவாக்கியது மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு. மீனவர்கள் நண்பன் யார் என்று கேட்டால் அது பிரதமர் நரேந்திரமோடிதான். மீனவர்களுக்காக எண்ணற்ற திட்டங்கள். இதெல்லாம் பிரதமர் மோடியின் சாதனை இல்லையா?
தேசத்துக்கு எதிராக ஆட்சி செய்து வருபவர்கள் தி.மு.க.வினர். தமிழகத்தில் தி.மு.க. அரசு என்பது ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கி வருகிறது. கடந்த தேர்தலில் மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றாத தி.மு.க. 2024-ம் ஆண்டு தேர்தலில் மறுபடியும் உங்களை ஏமாற்றுவதற்காக வருவார்கள். ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிடுகிறாரா? இல்லையா? என்பது நமக்குத் தெரியாது. யாரும் அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை.
பூத் அளவில் மாநாடு
ஆனால் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரத்தில் ஒரு பூத் அளவிலான மாநாட்டை நடத்தியிருக்கிறார். ஏன் இவ்வளவு பயம். மோடி ராமநாதபுரத்திலோ, கன்னியாகுமரியிலோ அல்லது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 39 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதிக்கோ வருவார் என்ற பயத்தில் அவர் பிதற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்தியா நன்றாக இருக்க வேண்டும், பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் எல்லா இடங்களிலும் பேச வேண்டும். தேர்தலுக்காக தி.மு.க. பொய்களை பேச ஆரம்பிக்கும். மத்திய அரசு செய்கின்ற அனைத்தையும் தமிழகத்துக்கு எதிராக திருப்பி விடப்பார்ப்பார்கள். இந்தி மற்றும் நீட் பிரச்சினைகளை பூதாகரமாக கொண்டு வரப்பார்ப்பார்கள். எதிரிகள் பொய்களை சத்தமாக பேசும்போது, தேசபக்தர்கள் உண்மையை கம்பீரமாக பேச வேண்டிய காலம் அடுத்த 7 மாத காலமாகும். அதனால் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றியின் முதல் கணக்கை கன்னியாகுமரி தொகுதியில் இருந்து தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நுங்கு சாப்பிட்டார்
முன்னதாக பாதயாத்திரையின்போது ஆவின் பால்பண்ணை அருகில் அண்ணாமலை நுங்கு சாப்பிட்டார். ஒரு குழந்தையை தூக்கி வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பாதயாத்திரையில் அண்ணாமலையுடன் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.