"உதயநிதி மறுக்காமல் அமைச்சர் பதவியை ஏற்க வேண்டும்" திமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும். அதனை அவர் மறுக்காமல் ஏற்று கொள்ள வேண்டும் என திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வி.என்.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் வருகிற 3-ந்தேதி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை மாவட்ட அலுவலகத்தில் கட்சி கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என சிறப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக உதயநிதி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், என்மீதுள்ள அன்பின் காரணமாக, எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு இனி யாரும் தர்ம சங்கடத்தை உருவாக்கிட வேண்டாம் என கேட்டு கொள்கிறேன் எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில், திருச்சி தி.மு.க., மத்திய மாவட்ட பொருளாளர் வைரமணி என்பவரது தலைமையில், துறையூரில் நடந்த கூட்டத்தில், கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும். அதனை அவர் மறுக்காமல் ஏற்று கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருநெல்வேலியிலும் அதேபோன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.