மக்களுக்கான நலத்திட்ட பணிகள் எதையும் தி.மு.க. செய்யவில்லை -அண்ணாமலை குற்றச்சாட்டு


மக்களுக்கான நலத்திட்ட பணிகள் எதையும் தி.மு.க. செய்யவில்லை -அண்ணாமலை குற்றச்சாட்டு
x

பவானியில் என் மண், என் மக்கள் நடைபயணத்தை தொடங்கிய பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, “மக்களுக்கான நலத்திட்ட பணிகள் எதையும் தி.மு.க. செய்யவில்லை” என குற்றம்சாட்டினார்.

ஈரோடு,

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் நடைபயணத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் 3-வது கட்ட நடைபயணத்தை நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் தொடங்கினார். ஈரோடு மாவட்டம் பவானியில் நேற்று அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார்.

இதையொட்டி பவானி சங்கமேஸ்வரர் கோவில் பிரிவு பகுதியில் அண்ணாமலை தனது நடைபயணத்தை தொடங்கினார். பின்னர் பூக்கடை பிரிவில் இருந்து அந்தியூர் பிரிவு வரை அண்ணாமலை நடந்து சென்றார். அப்போது வழிநெடுகிலும் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அவரை வரவேற்றனர்.

சனாதனத்தை ஒழிக்க முடியுமா?

சனாதனத்தை அன்றே ஒழிக்க முடியாத நிலையில் இன்று தி.மு.க.வால் சனாதனத்தை ஒழிக்க முடியுமா?

மக்களுக்கான நலத்திட்ட பணிகள் எதையும் தி.மு.க. செய்யவில்லை. ஆனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்ததுதான் தி.மு.க.வின் சாதனை ஆகும். உதயநிதி ஸ்டாலினை முதல்- அமைச்சராக்கி ஆட்சி கட்டிலில் அமர வைப்பதே தி.மு.க. நோக்கமாக கொண்டு உள்ளது.

அனைவருக்கும் குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் போல் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தபோதும் அதனை மூடி மறைக்கும் பணியில் தி.மு.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேம்படுத்த...

பவானியில் புவிசார் குறியீடு பெற்ற பவானி ஜமுக்காளம் உலகளவில் பிரசித்தி பெற்று உள்ளது. ஆனால் இந்த தொழிலில் ஈடுபட்டு உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பவானி ஜமுக்காள உற்பத்தி தொழிலை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமர் மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமராக பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், 'கவுந்தப்பாடியில் உற்பத்தி செய்யப்படும் நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தர வேண்டும் என கவுந்தப்பாடி சர்க்கரை உற்பத்தியாளர்களின் கோரிக்கையை பா.ஜனதா அரசு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்,' என்றார்.


Next Story