வாணியம்பாடி நகராட்சி துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க. வெற்றி


வாணியம்பாடி நகராட்சி துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க. வெற்றி
x

வாணியம்பாடி நகராட்சி துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

வாணியம்பாடி நகராட்சி துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சியில் துணைத்தலைவராக இருந்த தி.மு.க.வை சேர்ந்த வி. அப்துல்லா என்பவர் கடந்த மே மாதம் திடீரென உடல் நலக்குறைவால் காலமானார். இதனை தொடர்ந்து அந்த காலி இடத்திற்கான தேர்தல் நேற்று வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் அதிகாரியும், நகராட்சி ஆணையாளருமான மாரிச்செல்வி தேர்தலை நடத்தினார்.

நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் ஒரு காலியிடம்போக, மீதமுள்ள 35 வார்டு கவுன்சிலர்கள் வருகை புரிந்தனர். அதில் தி.மு.க. சார்பில் 9-வது வார்டு கவுன்சிலர் கையாஸ் அகமது துணைத்தலைவர் தேர்தலுக்கு போட்டியிட்டார், அவரை எதிர்த்து ஏ.ஐ.எம்.ஐ.எம் (ஊவைசி) கட்சியை சேர்ந்த நபீலா வக்கீல் அகமது என்பவர் போட்டியிட்டார்.

மொத்தம் பதிவான 34 வாக்குகளில் தி.மு.க.வை சேர்ந்த கையாஸ் அகமது 25 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஊவைசி கட்சியை சேர்ந்த நபிலா வக்கீல் அகமது 9 ஓட்டுக்களை பெற்று தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் அ.தி.மு.க. கவுன்சிலர் ஹாஜியார் ஜகீர் அகமது யாருக்கும் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வெற்றி பெற்ற துணைத்தலைவர் கையாஸ் அகமதுவுக்கு, நகராட்சி தலைவர் உமா சிவாஜிகணேசன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.எஸ்.சாரதி குமார், நகராட்சி ஆணையாளர் மாரிச்செல்வி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story