தி.மு.க. உள்கட்சி தேர்தல்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் விரைவில் நடக்க இருக்கிறது. இதையொட்டி கட்சி நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை,
தி.மு.க. உள்கட்சி தேர்தல் வேகமாக நடந்து வருகிறது. கிளை, பகுதி, வட்ட, பேரூர் மற்றும் ஒன்றிய செயலாளர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, நகர, மாநகர செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அமைதியான முறையில் உள்கட்சி தேர்தல் நடந்து வருகிறது.
தற்போது, மாவட்ட கழக செயலாளர் பதவிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக 77 மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள். இதனை 72 மாவட்டங்களாக குறைத்து தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இந்த 72 மாவட்டங்களுக்கு வருகிற 22-ந்தேதி முதல் 25-ந் தேதி வரை தேர்தல் நடத்தப்படுகிறது.
ஆலோசனை
இதில் போட்டியிட விரும்பும் மாவட்ட செயலாளர்கள் தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு சென்று மனு கொடுக்க வேண்டும். மாவட்ட செயலாளர்கள் தேர்தலை தொடர்ந்து, தி.மு.க. தலைவர் பதவிக்கும் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது.
உள்கட்சி தேர்தல் முழுமையாக முடிந்த பிறகு கட்சியின் செயற்குழு-பொதுக்குழு கூட இருக்கிறது. இதற்கான பணிகளில் மாநில நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தி.மு.க. உள்கட்சி தேர்தல், பொதுக்குழு கூட்டம் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்த தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்திற்கு நேற்று காலை வந்தார். பின்னர் அவர் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச்செயலாளர் ஆ.ராசா, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.
அடுத்த மாதம் பொதுக்குழு
அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் வாரத்தில் பொதுக்குழு கூடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேதியை தலைமை அலுவலகம் விரைவில் அறிவிக்கும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பொதுக்குழு கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.