தி.மு.க. பெண் கவுன்சிலர் குடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி


தி.மு.க. பெண் கவுன்சிலர் குடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 1 Jun 2023 6:45 PM GMT (Updated: 1 Jun 2023 6:45 PM GMT)

கொலை வழக்கில் இருந்து கணவா் பெயரை நீக்கக்கோரி தி.மு.க. பெண் கவுன்சிலர் குடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள கீழ்புத்துப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் துர்காதேவி. தி.மு.க. ஒன்றிய கவுன்சிலரான இவர் நேற்று தனது 4 மகன்கள் மற்றும் உறவினர்கள் என 12 பேருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர்கள் திடீரென மறைத்து எடுத்து வந்த கேனை திறந்து அதிலிருந்த டீசலை தங்கள் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதைப்பார்த்து அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தண்ணீரை எடுத்து வந்து துர்காதேவி உள்பட 12 பேர் மீதும் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் தீக்குளிக்க முயன்றதற்கான காரணம் குறித்து துர்காதேவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

மரக்காணம் அருகே உள்ள பொம்மையார் பாளையத்தில் நடந்த விமல்ராஜ் என்பவரின் கொலை வழக்கில் எனது கணவரும், மாவட்ட தி.மு.க. மீனவரணி செயலாளருமான கலைஞர் என்கிற நாகராஜ் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கொலைக்கும், எனது கணவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுபற்றி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று விமல்ராஜ் கொலை வழக்கில் இருந்து எனது கணவர் பெயரை நீக்க வேண்டும் என கூறினோம். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எனது கணவர் பெயரை கொலை வழக்கில் இருந்து நீக்குவதாக தெரிவித்தார். ஆனால், இதுவரை பெயரை நீக்கவில்லை. இதனால் மனமுடைந்த நான் எனது பிள்ளைகள் மற்றும் உறவினர்களோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். இதையடுத்து 12 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story