கவர்னரை வில்லன் போல காட்ட தி.மு.க.வினர் முயற்சி -அண்ணாமலை பேட்டி


கவர்னரை வில்லன் போல காட்ட தி.மு.க.வினர் முயற்சி -அண்ணாமலை பேட்டி
x

கவர்னரை வில்லன் போல காட்ட தி.மு.க.வினர் முயற்சித்து வருகிறார்கள் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோவை,

சென்னையில் இருந்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று விமானம் மூலம் கோவை சென்றார். அவர் கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி குறித்து ஜனாதிபதிக்கு புகார் கடிதம் எழுதி உள்ளார். அதில் உள்ள தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாகவே இருக்கிறது. மேலும் அது, 2024-ம் ஆண்டு நாடாளு மன்ற தேர்தல் தோல்வி பயம் காரணமாக எழுதப்பட்ட கடிதமாகவே பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் உண்மையான நிலையை பிரதிபலிக்கும் விதமாக முதல்- அமைச்சரின் கடிதம் இல்லை. தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை விட்டு விட்டு எப்போது பார்த்தாலும் கவர்னரை சீண்டி பார்ப்பதிலேயே தங்களது நேரத்தை தி.மு.க. அரசு செலவிட்டு வருகிறது.

வில்லனைபோல் காட்ட முயற்சி

தமிழகத்தில் விஷச்சாராய சாவு, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை என பல பிரச்சினைகள் இருக்கிறது. அவற்றை அரசு கண்டு கொள்வதாக தெரியவில்லை. மாறாக தங்களது கட்சியினரின் தவறுகளை மறைக்க கவர்னர் மீது பழி போட்டு வருகிறார்கள். அதை எப்படி ஏற்க முடியும்?. மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, கவர்னரை சந்தித்து அப்போது அமைச்சர்களாக இருந்தவர்களை நீக்க வலியுறுத்தினார். தற்போது கவர்னர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க அதிகாரம் இல்லை என்று கூறுகிறார்கள். அப்போது கவர்னருக்கு இருந்த அதிகாரம் தற்போது இல்லையா?

தாங்கள் செய்யக் கூடிய தவறுகள் அனைத்தையும் மறைப்பதற்காக கவர்னரை ஒரு வில்லன் போல காட்ட தி.மு.க.வினர் முயற்சித்து வருகிறார்கள். தி.மு.க.வினர் கவர்னருக்கு எப்போதும் மரியாதை கொடுப்பதில்லை. தரக்குறைவாக விமர்சித்து வருகிறார்கள். முதலில் அவரது பதவிக்கு மரியாதை கொடுத்து பேச தி.மு.க. எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

உரிமை உள்ளது

தி.மு.க. சொல்வதை எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் கவர்னருக்கு கிடையாது. கவர்னர் அவருக்கான கருத்துகளை பேச உரிமை உள்ளது. சிதம்பரம் குழந்தைகள் உரிமை மீறல் விவகாரம் தொடர்பாக கவர்னர் மீது வழக்குப்பதிவு செய்ய முடியும் என கூறுகிறார்கள். தேசிய குழந்தைகள் ஆணையம் விசாரித்து ஒரு அறிக்கை கொடுத்து இருக்கிறது. அவர்கள் சொல்வது தவறா? காவல்துறை சொல்வது தவறா? என்பது தான் விவாதமே தவிர இதற்கு எப்படி கவர்னர் பொறுப்பு ஆவார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது. அதன் வெளிப்பாடே கவர்னரை பற்றிய இந்த கடிதம். மற்றபடி அவர் தமிழகத்தின் உண்மையான நிலையை அந்த கடிதத்தில் விளக்கவில்லை. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. இந்தியா முழுவதும் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story