தி.மு.க.வினர் ஆடும் கபட நாடகம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது -அண்ணாமலை அறிக்கை


தி.மு.க.வினர் ஆடும் கபட நாடகம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது -அண்ணாமலை அறிக்கை
x

தி.மு.க.வினர் ஆடும் கபட நாடகம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

அமைச்சர் உதயநிதி, சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று பேசிய அதே கூட்டத்தில், அவருக்கு முன்பு பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சனாதன தர்மமும், இந்து மதமும் ஒன்றுதான் என்று பேசினார். தற்போது, மத வேறுபாடின்றி, பொதுமக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்ததும், வேறு வழியின்றி ஏதேதோ மாற்றி பேசி மடைமாற்ற முயற்சிக்கிறார்கள்.

சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று பேசும் தி.மு.க.வினரின் உண்மையான நோக்கம் வேறு. மக்களின் வாழ்வியலில் இருந்து சனாதன தர்மத்தையோ, இந்து மத நம்பிக்கைகளையோ பிரிக்க முடியாது என்பதை அறிந்த இவர்கள், மக்களின் வழிபாட்டு முறைகளை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள். மக்களிடையே பிரிவினையைத் தூண்டுகிறார்கள். பழியை சனாதன தர்மத்தின் மீது போடுகிறார்கள்.

நாம் எல்லா மதமும் சம்மதம் என்கிறோம். ஆனால், தி.மு.க.வினர் இந்து மதத்தை தவிர அனைத்து மதமும் சம்மதம் என்கிறார்கள். அதற்கு இவர்கள் வைத்துள்ள பெயர்தான் சனாதன ஒழிப்பு. இறுதியாக தி.மு.க.வினருக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்.

கபட நாடகம்

கடவுள் இல்லை என்று ஆரம்பித்த உங்கள் கட்சியின் நிறுவனர் மறைந்த அண்ணாதுரை, இறுதியில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதில் வந்து நின்றார். இந்து சமயத்தை வசைபாடிய மறைந்த கருணாநிதி, இந்து மதத்தைப் புண்படுத்தவில்லை என்று நீதிமன்றத்துக்கு சென்று சொன்னார்.

கடந்த தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாக, தி.மு.க.வில் 90 சதவீதம் இந்துக்களே என்றார், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். சனாதன தர்மம் வேறு, இந்து மதம் வேறு என்று சமாளித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி. உங்களுக்கு வேறு வழியில்லை. தேர்தலின்போது மட்டும் கோவில் கோவிலாக படியேறி, நெற்றியில் விபூதி வைத்து நீங்கள் ஆடும் கபட நாடகம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என்பதை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story