மக்கள் கடனில் தவிக்கும் போது கடலில் ரூ.80 கோடியில் பேனா தேவையா? - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி
மக்கள் கடனில் தவிக்கும் போது கடலில் ரூ.80 கோடி ரூபாய்க்கு பேனா தேவையா? என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை,
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர், அமைப்பு செயலாளர் செல்லூர் ராஜு எம்எல்ஏ பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பொறுப்பேற்ற ஐந்தாவது நாளில் திமுக அரசுக்கு சாவு மணி அடிக்கும் வகையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக ஆட்சிக்கு வந்து 1 ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை தமிழக மக்களுக்கு எந்த ஒரு நன்மையாவது செய்தது உண்டா?. கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அனைத்து திட்டங்களையும் ரத்து செய்து விட்டார்கள். காரணம் கேட்டால் நிதியில்லை என்கிறார்கள்.
ஆனால், கருணாநிதி பெயரில் நூலகம் அமைப்பதற்கு நிதி இருக்கிறது. இப்போது கருணாநிதி நினைவாக கடலில் பேனா அமைப்பதற்கு ரூ.80 கோடியை ஒதுக்குவதற்கு நிதி இருக்கிறது. மக்களுக்கு திட்டங்களைத் தர நிதி இல்லையா. மக்கள் கடனில் தவிக்கிறார்கள். இப்போது கடலில் பேனா தேவையா?
இதனை திமுக ஆட்சியாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள் செய்தார்களா?.திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக மக்கள் அனைவரும் விரைவில் கொதித்து எழுவார்கள். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்து விட்டார்கள்.
கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கலுக்கு ஐந்தாயிரம் கொடுக்க வேண்டும் என்றார்கள். இவர்கள் ஆட்சியில் பொங்கல் பண்டிகைக்கு எவ்வளவு கொடுத்தார்கள் மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இங்கே திரண்டு உள்ள இந்த கூட்டத்தை பார்க்கும் போது சிலர் திமுகவுக்கு அடுத்து நாங்கள் தான் என்று பேசி வருவதற்கு சரியான சவுக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. எப்போதுமே தமிழகத்தில் திமுகவுக்கு சரியான எதிரி அதிமுக தான் என்பதை இங்கு திரண்டு உள்ள கூட்டம் காட்டியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.