டாக்டர்கள், வக்கீல்கள் போல் கல்லூரி பேராசிரியர்களுக்கு மேல் அங்கி


டாக்டர்கள், வக்கீல்கள் போல் கல்லூரி பேராசிரியர்களுக்கு மேல் அங்கி
x

கல்லூரி பேராசிரியர்களுக்கு மேல் அங்கி அணிவது குறித்து ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர்

தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது பள்ளிக்கூட மாணவர்களுக்கு சீருடை திட்டத்தை கொண்டுவந்தார். மாணவர்களிடம் சமத்துவ உணர்வு ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

தற்போது தனியார் கல்வி நிறுவனங்களின் வருகையால் அத்திட்டம், பலவித பரிணாமங்களைப் பெற்று நடைமுறையில் இருக்கிறது.

ஆடை கட்டுப்பாடு

பல வர்த்தக நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றிலும் சீருடை முறை பின்பற்றப்படுகிறது.

தங்கள் நிறுவனப் பணியாளர்களை அடையாளப்படுத்துவதற்காக இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

அதுபோல் டாக்டர்கள் வெள்ளை நிறத்திலும், வக்கீல்கள் கறுப்பு நிறத்திலும் கோட்டு அணிவதும் அதற்காகத்தான்.

சில கல்வி நிறுவனங்களில் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு ஆடைக்கட்டுப்பாடு தொடர்ந்து வருகிறது. சிலநேரங்களில் இதனால் சர்ச்சைகளும் எழுந்துவருகின்றன.

ஜன்னல் வைத்த ஜாக்கெட்

2008-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆடைக் கட்டுப்பாட்டில் சில உத்தரவுகளை பேராசிரியர்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டனர்.

2009-ம் ஆண்டு பள்ளி ஆசிரியைகள் ஜன்னல் வைத்த ஜாக்கெட்டோ, மெல்லிய உடைகளோ அணிந்து வர தடைவிதிக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகின.

2018-ல் ஒடிசா மாநில பள்ளி ஆசிரியைகள் கைத்தறி சேலை அணிந்துவரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2021-ம் ஆண்டில் கேரளாவில் கல்வி நிலையங்களில் பணியாற்றும் ஆசிரியைகள், பேராசிரியைகள் சேலை அணிந்துவர கட்டாயப்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதன்பின்னர், கேரள கல்வித்துறை அமைச்சகம் ஆடை அணிவதில் கட்டுப்பாடில்லை என்று கூறி அந்த புகாருக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

மேல் அங்கி அணிய வேண்டும்

தற்போது தமிழக உயர்கல்வித் துறைக்கு, வந்த ஒரு புகார் மனு அடிப்படையில், அனைத்து பல்கலைக்கழக பதிவாளர், கல்லூரிக்கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்துக்கு ஆடைக் கட்டுப்பாடு குறித்த ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.

அதில், 'கல்லூரிகளில் பேராசிரியர்கள் அனைவரும் தங்களை மாணவர்களிடம் இருந்து தனியாக வேறுபடுத்தி காட்டும் விதமாகவும், உடல் அமைப்பை மறைக்கும் விதமாகவும் 'மேல் அங்கி' (ஓவர் கோட்) அணிய வேண்டும். மேலும் பேராசிரியர்களுக்குள் ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும். இதற்கு அந்தந்த நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

உயர்கல்வித் துறையின் இந்த சுற்றறிக்கை உத்தரவா? அல்லது யோசனையா? புகார் மீதான நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து இருக்கிறதா? என்பது எல்லாம் புரியாத புதிராக இருக்கின்றன. அதை உயர்கல்வித்துறை தெளிவுப்படுத்த வேண்டும். இருப்பினும், உயர்கல்வித்துறை கூறி இருப்பது போல, கல்லூரி பேராசிரியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு என்பது அவசியமானதா?, அதை நடைமுறைப்படுத்துவது சரியாக இருக்குமா? என்பது குறித்து பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

புதிய முயற்சியாக இருக்கும்

தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க தலைவர் பி.திருநாவுக்கரசு கூறுகையில், 'கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சில ஆசிரியர்களின் உடைகள் சரியில்லாமல்தான் இருக்கிறது. அனைவரையும் சொல்லவில்லை. உயர்கல்வித்துறை பரிந்துரைத்துள்ள மேல் அங்கி அணிவது என்பது சற்று அதிகம் தான். ஆசிரியர்களை பார்த்தால் ஒரு மரியாதை வரவேண்டும். அதற்கேற்றாற்போல் கண்ணியமான உடை அணிவது அவசியமான ஒன்று. நான் பணிபுரியும் கல்லூரியில் சீருடை இருக்கிறது. ஆகவே எங்களுக்கு அந்தப் பிரச்சினை இல்லை. இதை எங்கள் கல்லூரி பாரம்பரியாக செய்து வருகிறது. அனைவரையும் இதேபோல் பின்பற்றச் சொல்லவில்லை.

அதேநேரத்தில் சரியான உடையை அணிந்தால் நல்லது. ஆசிரியரை பார்த்து, மாணவர்களும் அதேபோல் வரவேண்டும். அதற்கேற்றபடி ஆசிரியர்கள் உடை அணிவது சரியாக இருக்கும்' என்றார்.

பெண்களுக்கு மட்டும் கூடாது

காட்பாடியை சேர்ந்த கல்லூரி பேராசிரியை அமுதா:-

தமிழகத்தில் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியைகள் தங்களுக்கு உகந்த மற்றும் கண்ணியமான ஆடைகள்தான் கல்லூரிக்கு அணிந்து வருகின்றனர். மேலும் ஆய்வகம் போன்ற இடங்களுக்கு செல்ல அதற்குத் தேவையான உடைகளை அணிகின்றனர். சேலையின் மீது மேலங்கி அணிய வேண்டும். அதுவும் சீருடையாக அணிய வேண்டும் என உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பெண் பேராசிரியைகளுக்கு மட்டும் உடை கட்டுப்பாடு என்பது கூடாது. இதே உடை கட்டுப்பாடு ஆண் பேராசிரியர்களுக்கும் உள்ளதா என்பது என் கேள்வி.

உடைகளை வைத்து மாணவர்கள் ஆசிரியர்களை நிர்ணயம் செய்வதில்லை. அவர்கள் கற்றுக் கொடுக்கும் கல்வியை வைத்து தான் மாணவர்கள், ஆசிரியர்களை நிர்ணயம் செய்கின்றனர். இந்த உத்தரவு பெண்களை பிற்போக்கு காலத்துக்கு கொண்டு செல்கிறதோ என நினைக்கத் தோன்றுகிறது. உடை கட்டுப்பாடு என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். அதில் ஆண், பெண் பேதம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தனித்தன்மைைய வெளிக் காட்டுகிறது

வேலூரை சேர்ந்த கல்லூரி உதவி பேராசிரியை நேசமணிமரகதம்:- கல்லூரிகளில் பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு கொண்டுவரும் உத்தரவு வரவேற்கத்தக்கது. மேலங்கி அணிவதன் மூலம் மாணவர்களையும், பேராசிரியர்களையும் வேறுபடுத்தி காட்டுகிறது. கோர்ட்டுகளில் வக்கீல்கள் கருப்பு நிற மேலங்கி அணிகின்றனர். அதேபோன்று டாக்டர்கள் வெள்ளை நிற அங்கி அணிகின்றனர். இது அந்தப் பணியின் தனித்தன்மையை வெளிக்காட்டுகிறது. அதே போன்று பேராசிரியர்களுக்கும் தனித்துவமான மேலங்கி அணிவதன் மூலம் பார்ப்பதற்கு நன்மதிப்பை கொண்டு வரும்.

திருப்பத்தூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியை சித்தரா:- கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு என்பது அவசியமான ஒன்று தான். உயர்கல்வித் துறையின் இந்த முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது. சீருடை என்பது ஏற்றத்தாழ்வு, வேறுபாடு ஏதும் இன்றி அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் நோக்கத்தோடு மாணவர்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டம். இது ஆசிரியர்களுக்கும் பொருந்தும். வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்றது நமது இந்திய தேசம். அதை நாம் கல்லூரிகளிலும் பிரதிபலிக்க செய்ய வேண்டும். சீருடை மற்றும் ஆடைக்கட்டுப்பாடு என்பது மாணவர்களிடையே, ஆசிரியர்கள் முன்மாதிரியாக விளங்க செய்யும். மேலும் அவர்களை கண்ணியத்தோடும், நல்ஒழுக்கத் தோடும் வழிநடத்த உறுதுணையாக இருக்கும். எனவே பேராசிரியர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு மற்றும் சீருடை மிகவும் இன்றியமையாத ஒன்றாக விளங்கும். இதனை நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம்.

வரவேற்பு

வாணியம்பாடியை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் ப.சிவராஜி:- தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்க ஒன்று ஏனெனில் மாணவர்கள், பேராசிரியர்கள் இடையே ஒரு தனி அடையாளமாக இது தெரியும். கல்லூரிகளில் பேராசிரியர்கள் அனைவரும் மாணவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டும் விதமாக அமையும். வரவேற்கத்தக்க இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

திருவண்ணாமலையை சேர்ந்த கல்லூரி இயக்குனர் ஜி.அருண்:- உயர்கல்வித்துறை அறிவுறுத்தலால் கல்லூரி பேராசிரியைகள் ஓவர் கோட் அணிவதை வரவேற்கின்றனர். இருபால் மாணவர்கள் பயிலும் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியைகள் இதனை எதிர்ப்பார்கின்றனர். பேராசிரியர்கள் முதல் தூய்மை பணியாளர்கள் வரை ஓவர் கோட் அணிவதை பாதுகாப்பாக கருதுகின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் மாணவர்கள் பலர் ஆடை அலங்காரம் செய்வது சரியாக இல்லை. ஆண் பேராசிரியர்கள் ஷூ, டை, ஆடையை டக் இன் செய்து போடுவதால் மாணவர்களுக்கும் அவர்கள் ஒரு முன்னுதாரணமாக இருப்பார்கள். பேராசிரியர்கள் முன்னுதாரணமாக இருந்தால்தான் மாணவர்களை அவர்கள் மாற்ற முடியும். அப்போது தான் மாணவர்கள் பிற்காலத்தில் ஏதாவது ஒரு வேலைக்கு செல்லும் போது ஒழுக்கமாக தெரிவார்கள். அதனால் அந்த திட்டத்தை வரவேற்கிறேன்.

ஆடை கட்டுப்பாடு அவசியம்

மேல்விஷாரத்தை சேர்ந்த உதவிப் பேராசிரியர் ப.குமரன்:- அனைத்து கல்லூரி பேராசிரியர்களுக்கும் இடையே வேறுபாடுகள் ஏற்படாதவாறு மற்றும் மாணவர்களிடமிருந்து வேறுபடுத்தி காண்பிக்கும் வகையில் ஆடைகள் அணிய வேண்டும் என்ற கருத்து வரவேற்கத்தக்க ஒரு விஷயமாகும். இருபால் மாணவர்கள் படிக்கின்ற கல்லூரிகளில் இருபால் ஆசிரியர்கள் வேலை செய்கின்றனர். அந்தக் கல்லூரிகளில் ஆடை கட்டுப்பாடு என்பது மிகவும் அவசியமாகும். இந்த ஆடை கட்டுப்பாடு மாணவர்களிடத்தில் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. கல்லூரிக்கு வரும் மாணவர்கள் ஜீன்ஸ் பேண்ட், டி-ஷர்ட் அணியக்கூடாது என்று சொல்லுகின்ற நாங்கள் ஆடை கட்டுப்பாட்டுடன் இருந்தால்தான் மாணவர்களுக்கும் முன் மாதிரியாக பேராசிரியர்கள் திகழ்வார்கள். மேல் அங்கி அணிய வேண்டும் என்பது வரவேற்கத்தக்கது.

விளாப்பாக்கத்தை ேசர்ந்த கல்லூரி முதல்வர் பி.நிர்மலா:- ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழிக்கு ஏற்ப மனிதர்களை நாம் முதலில் வெளித்தோற்றத்தை வைத்தே எடை‌ போடுகின்றோம். அப்படி இருக்க மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கக் கூடிய உதவி பேராசிரியர்களுக்கு அவர்களின் வெளித்தோற்றமே முதலில் அவர்களின் மீது கண்ணியத்தையும், மரியாதையையும் ஏற்படுத்துகிறது. எனவே உதவி பேராசிரியர்கள் அணியும் ஆடை கட்டுப்பாட்டுடனும், நேர்த்தியுடனும் இருப்பது அவசியம். மேலும் எதிர்கால சமுதாயத்தை உருவாக்கக் கூடிய பொறுப்பு அவர்களுக்கு இருப்பதால் சமுதாயத்தின் முன்னுதாரணமாக திகழ்வது உதவி பேராசிரியர்களின் தலையாய கடமையாக கருதப்படுகிறது. ஆடை கட்டுப்பாடு என்பது உதவி பேராசிரியர்களுக்கு தன் பணியுடன் சேர்ந்த ஒன்றே. எனவே ஆடை கட்டுப்பாடு என்பது அவசியமே. ஆடை கட்டுப்பாட்டை ஆதரிப்போம், பின்பற்றுவோம்.

அரசு கல்லூரி மாணவி மெஹராஜ்:- பேராசிரியர்கள், பேராசிரியைகள் தற்போது கண்ணியமான உடையில்தான் வருகிறார்கள். இருப்பினும் அரசு கூறியிருப்பது போன்று மேல் அங்கி அணிவது என்பது அவர்களின் கருத்துகளை பெற்று நடைமுறைப்படுத்தினால் நன்றாக இருக்கும். விருப்பத்தின் பேரில் பேராசிரியர்கள், பேராசிரியைகள் கற்பித்தல் பணியை மேற்கொள்ளலாம்.

செய்யாறை சேர்ந்த பெற்றோர் டி.ஜி.அருள்ராஜ்:- 'பிள்ளைகளுக்கு ஆடைக் கட்டுப்பாடு இருப்பது போன்று, கல்லூரி பேராசிரியர்கள், பேராசிரியைகளுக்கும் உடையில் சில கட்டுப்பாடுகள் கொண்டு வர இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. அவ்வாறு வந்தால் நல்லதுதான். ஆசிரியர் பெருமக்களுக்கு இது நன்மையானதாகத் தான் இருக்கும். அதுவும் குறிப்பாக பேராசிரியைகளுக்கு மேல் அங்கி அணியச் சொல்வது என்பது அவர்களுக்கு சவுகரியத்தை தரும். கற்பித்தல் பணியை அவர்கள் சிறப்பாக மேற்கொள்வார்கள்.

அதேநேரத்தில் கண்ணியமான உடை அணிந்து வரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஏற்கனவே கல்லூரிகளில் பேராசிரியர்கள், பேராசிரியைகள் அவ்வாறுதான் உடை அணிந்து வருகிறார்கள். எனவே அரசின் இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்துவது ஒரு புதிய முயற்சியாக இருக்கும்..

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story