சென்னையில் நாய்கள் கண்காட்சி


சென்னையில் நாய்கள் கண்காட்சி
x

சென்னையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் 56 வகை நாய்கள் பங்கேற்றனர்.

சென்னை,

மெட்ராஸ் கேனைன் கிளப் சார்பில் சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் நாய்கள் கண்காட்சி போட்டி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. கிளப்பின் தலைவர் சுதர்சன் மற்றும் செயலாளர் சித்தார்த்தா ஆகியோர் கண்காட்சிக்கு முன்னிலை வகித்தனர்.

இந்த கண்காட்சி போட்டியில், நடுவர்கள் முன்னிலையில் நாய்கள் உரிமையாளர்களுடன் வட்டமிட்டு ஒய்யாரமாக நடந்து சென்றன.

'மின்யேட்சர்' நாய்கள்

போட்டியில் 56-க்கும் மேற்பட்ட நாய் வகைகள் பங்கேற்றன. அதன்படி 565 போட்டியாளர்கள் தங்களது நாய்களுடன் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டி முடிவை அறிவிக்க செர்பியா மற்றும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 3 நடுவர்கள், இந்தியாவை சேர்ந்த 2 நடுவர்கள் இடம் பெற்றிருந்தனர்.

கண்காட்சியில் வெளிநாடுகளை சேர்ந்த பல வகை நாய்களும் இடம்பெற்றிருந்தன.

கோம்பை, சிப்பி

அதேபோல் ராஜபாளையம், சிப்பிப்பாறை, முதூல் அவுண்டு, கேரல் அவுண்டு, கோம்பை, கன்னி, பாஸ்மி போன்ற உள்நாட்டு நாய் வகைகளும் போட்டியில் கலந்து கொண்டன. கண்காட்சியில் 'மின்யேட்சர் பின்சர்' வகை நாய்களின் சுறுசுறுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

அதேபோல் வீட்டில் உரிமையாளருடன் கேரட், வெள்ளரிக்காய் உண்ணும் 'இந்தியன் ஸ்பிட்' வகை நாயும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பனிப்பிரதேசத்தில் மட்டுமே வாழும் 'சைபீரியன் ஹஸ்கி' வகை நாய்களும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.

அமைச்சர்கள் பங்கேற்பு

இதனையடுத்து சிறந்த நாய்கள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், தா.மோ.அன்பரசன் மற்றும் இந்து என்.ராம் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

அந்த வகையில், ஒட்டுமொத்தமாக சிறந்த நாய்களுக்கான விருதை டாபர்மேனும், ராட் வில்லரும் பெற்றன. இதுபோல், கீழ்படிதல், சுறுசுறுப்பு, கண்காணிப்பு, பாதுகாப்பு பிரிவுகளில் சிறந்து விளங்கிய நாய்களை நடுவர்கள் தேர்வு செய்து, அதற்கு பிரத்தியேகமாக பரிசுகளும் வழங்கப்பட்டன. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன்கள் சண்முகபாண்டியன், விஜயபிரபாகரன் ஆகியோர் வளர்த்து வரும் நாய்களும் இந்த போட்டியில் பங்கேற்றன. அதில் 3 பரிசுகளை அவர்கள் தட்டிச் சென்றனர்.


Next Story