மேட்டூர் அணை திறப்பு எதிரொலி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு


மேட்டூர் அணை திறப்பு எதிரொலி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
x

காவிரி டெல்டா பகுதியில் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்,

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம்.

இந்த ஆண்டு மே 24-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்துவைத்தார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மே மாதத்தில் தண்ணீர் திறக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

தூர்வாரும் பணி

மேட்டூர் அணையில் இருந்து முன்னதாக தண்ணீர் திறந்துவிடப்படுவதால் டெல்டா பாசன பகுதிகளில் வழக்கத்தை விட குறுவை சாகுபடி பரப்பும், உற்பத்தியும் அதிகரிப்பதோடு, எதிர்வரும் சம்பா சாகுபடி பணிகளை முன்னதாக தொடங்கி செயல்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் சிறப்பு தூர்வாரும் பணி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் பணிக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி மூலம் 4 ஆயிரத்து 965 கிலோ மீட்டர் நீளத்துக்கு பணிகள் நடந்து வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் மட்டும் ரூ.21 கோடி மதிப்பீட்டில் 1,356 கிலோ மீட்டர் நீளத்துக்கு 170 பணிகள் நடந்து வருகிறது. இவற்றில் பல இடங்களில் பணிகள் முடிவடைந்துள்ளது. சில பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது.

மு.க.ஸ்டாலின் ஆய்வு

இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருச்சிக்கு வந்தார்.

பின்னர் அங்கிருந்து காரில் நேற்று மாலை தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே வடபாதி கொக்கேரி கிராமத்திற்கு வந்தார். அங்கு பீமனோடை வடிகால் ரூ.14½ லட்சம் மதிப்பில் 4.5 கிலோ மீட்டர் தூரம் தூர்வாரப்பட்டதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விவசாயிகளுக்கு திருப்தியா?

அப்போது மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் தரமாக நடைபெற்று உள்ளதா? எனவும், விவசாயிகளுக்கு திருப்தியாக இருக்கிறதா? எனவும் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

பின்னர் அவர், செய்தி மக்கள் தொடர்பு துறை வாகனத்தில் இருந்த எல்.இ.டி. திரையில் கோணக்கடுங்கலார் வடிகாலில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிக்காக விவசாயிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தது குறித்த காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டதை பார்வையிட்டார்.

விதை நெல் அரங்கை பார்வையிட்டார்

முன்னதாக வேளாண் துறை சார்பில் குறுவை சாகுபடிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விதைநெல், பூச்சிக்கொல்லி மருந்து, நாற்றங்கால் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்த அரங்கை பார்வையிட்டார்.

தொடர்ந்து திருவையாறு தாலுகா குழிமாத்தூர் உள்ளிட்ட இடங்களில் தூர்வாரும் பணி முடிவடைந்த புகைப்படங்களை பார்வையிட்டார்.

அமைச்சர்கள்-அதிகாரிகள்

இந்த ஆய்வின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

மனுக்கள் வாங்கினார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் சாலையோரத்தில் திரண்டு நின்றனர். இவர்களைப் பார்த்தவுடன் அவர்கள் நிற்கும் இடத்திற்கே மு.க.ஸ்டாலின் சென்று அவர் களிடம் நலம் விசாரித்தார்.

அப்போது விவசாயிகள் காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட்டதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பின்னர் விவசாயிகள், பொதுமக்கள் கொடுத்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டார்.

வேளாங்கண்ணியில் தங்கினார்

அம்மாபேட்டை அருகே தூர்வாரும் பணியை ஆய்வு செய்து விட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சென்றார்.

அங்கு அவருக்கு தி.மு.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள ஒரு ஓட்டலில் இரவு தங்கினார்.

இன்றும் ஆய்வு

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள கருவேலங்கடையில் உள்ள கல்லாறு வடிகால் தூர்வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

பின்னர் அவர் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் மாவட்டம் பேரளத்தை அடுத்த கொத்தங்குடியில் தூர்வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் காட்டூரில் மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி அருங்காட்சியகம் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். அங்கிருந்து மீண்டும் திருவாரூர் வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது வீட்டில் மதிய உணவு சாப்பிடுகிறார்.

மாலை 4 மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்பட்டு கார் மூலம் திருச்சி செல்கிறார். திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.


Next Story