அதிமுக நிர்வாகிகள் உடன் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் உடன் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை,
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது. அதில், 23 தீா்மானங்களைத் தவிர மற்ற தீா்மானங்களை நிறைவேற்றக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற அமா்வு உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் 23 தீா்மானங்கள் நிராகரிக்கப்பட்டதுடன், கட்சியின் தற்காலிக அவைத் தலைவரான தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத் தலைவராக நியமித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த பொதுக் குழு ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு,பொதுக்குழு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நீதிமன்ற உத்தரவை மீறி ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் சண்முகம் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் உடன் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், வளர்மதி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். அதிமுக பொதுக்குழுவுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெறும் என்று கூறப்படுகிறது.