மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்


மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
x

கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000/- நிவாரணமாக வழங்க வேண்டும்

சென்னை,

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;

கடந்த சில நாட்களாக தமிழகமெங்கும் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இக்கனமழையின் காரணமாக மாநிலம் முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் மட்டும் நெல் பயிரிட்ட சுமார் 1 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட பாசன நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்ட நிலங்கள் மழையில் மூழ்கியுள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக சீர்காழி மற்றும் பூம்புகார் தொகுதிகளில் வரலாறு காணாத கன மழை பெய்ததன் காரணமாக பல இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு தனித் தனி தீவுகளாக காட்சியளிக்கின்றன. கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதிகளில் மட்டும் சுமார் 6,000 ஏக்கர் நிலங்கள் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. இக் கனமழையில் மாநிலம் முழுவதும் நெல்லுடன், வாழை, நிலக்கடலை மற்றும் காய்கறிகள் போன்ற பயிர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் அதிகாரிகளை நேரில் அனுப்பி, கணக்கெடுத்து அனைவருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த விடியா தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

விவசாயிகள் கடன் வாங்கி பயிரிட்டு ஒரு மாத காலத்திற்குள் தற்போது பெய்த கனமழையின் காரணமாக தங்களுடைய உழைப்பு வீணாகிப் போய்விட்டதே என்றும், தாங்கள் மேலும் கடன்காரர்களாக மாறிவிட்டோமே என்றும், தங்களுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டதே என்றும் விவசாயிகள் மிகுந்த மனவேதனையுடன் தங்கள் மனக்குமுறளை எடுத்துரைக்கின்றனர். இதுவரை இந்த விடியா தி.மு.க. அமைச்சர்களும், அதிகாரிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை முழுமையாக பார்வையிட்டு வேளாண் பெருமக்களுக்கு எந்தவிதமான ஆறுதலையும் சொல்லாமல் இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

இந்த ஆண்டு பயிர் காப்பீட்டிற்கான கடைசி நாள் 15.11.2022 என்று அரசு அறிவித்துள்ளது. எனவே, பயிர் காப்பீட்டிற்கான கால அவகாசத்தை இம்மாத இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என்றும், வேளாண் அதிகாரிகளுடன் காப்பீட்டு நிறுவன அதிகாரிகளும் விவசாயிகளிடம் நேரில் சென்று, அவர்களது நிலங்களை காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டுவர, காப்பீட்டு நிறுவனங்களுடன் பேசி இந்த விடியா அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும், இந்தாண்டு காப்பீட்டு நிறுவனங்களுக்கு விவசாயிகள் கட்ட வேண்டிய காப்பீட்டுத் தொகையை மாநில அரசே ஏற்று பீரிமியத்தை செலுத்த வேண்டும் என்றும் வற்புறுத்துகிறேன். மேலும், தற்போது பெய்த கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000/- நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் இந்த தி.மு.க. அரசை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story