எடப்பாடி பழனிசாமியின் ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளியே வரும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


எடப்பாடி பழனிசாமியின் ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளியே வரும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x

எடப்பாடி பழனிசாமியின் ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளியே வரும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னை,

அ.தி.மு.க. உள்கட்சி பிரச்சினை தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி அணியை மகிழ்ச்சியிலும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரை அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

இதில் அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

'தீர்ப்பால் வருத்தம் இல்லை'

இந்த கூட்டம் முடிந்தவுடன் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ள இந்த தீர்ப்பால் நாங்கள் வருத்தம் அடையவில்லை. நாங்கள் கூடிய விரைவில் மக்களை நாடி செல்ல உள்ளோம். மக்களிடம் நீதி கேட்போம். நாங்கள் தனிக்கட்சி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை. ஜெயலலிதா 50 ஆண்டு காலம் தன்னுடைய உயிரைக்கொடுத்து இந்த இயக்கத்தை காப்பாற்றி இருக்கிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய 2 தலைவர்களும் இயற்றிய சட்ட விதிகளை காப்பாற்றத்தான் போராடி வருகிறோம்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவர்தான் அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளர் என்று தீர்மானம் நிறைவேற்றினோம். இந்த தீர்மானத்தை ரத்து செய்ய யாருக்கும் அதிகாரம் கிடையாது. இந்த இயக்கம் தொண்டர்களுக்கான இயக்கம். அடிப்படை உரிமையாக கட்சியின் உச்ச பதவிகளில் இருப்பவர்களை உறுப்பினர்கள் வாக்களித்துத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சட்டவிதியை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தார். எப்படி கூவத்தூரில் நடந்ததோ அதுபோல கட்சியைக் கைப்பற்றி தங்களது கைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ரகசியங்கள் ஒவ்வொன்றாய்....

அ.தி.மு.க. என்னுடைய தாத்தாவோ, பழனிசாமி தாத்தாவோ ஆரம்பித்த கட்சி இல்லை. தொண்டர்களுக்காக எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சி. அதற்காகத்தான் தர்ம யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். இதற்கு ஒரு நல்ல தீர்ப்பு வரும் என்று நாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் போராடினோம். இப்போது மக்கள் மன்றத்தை நாங்கள் நாடி செல்வதற்கு எங்களின் படை தயாராகிவிட்டது. மக்கள் மன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் எங்களுக்கு பின்னடைவு இல்லை.

இந்த தீர்ப்பு வந்ததற்கு பின்னால்தான் எங்களுடைய தொண்டர்கள் மிகவும் எழுச்சியுடன் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி அணிதான் தி.மு.க.வின் 'பி டீம்'. எங்கள் மீது எந்த தப்பும் சொல்ல முடியாது. ஆனால், அவர்களைப் பற்றி சொல்ல ஆயிரம் ரகசியங்கள் இருக்கின்றன. அவை, இனிமேல் ஒவ்வொன்றாக வெளியே வரும்.

'சசிகலா, தினகரனை சந்திப்பேன்'

கட்சியின் கட்டுப்பாடு கருதி, கட்சி பிரிந்துவிடக்கூடாது என்று நாங்கள் பொறுமை காத்திருந்தோம். சசிகலா, டி.டி.வி.தினகரன் மற்றும் என்னை கட்சியில் சேர்க்க மாட்டோம் என்று சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? ஆணவத்தின் உச்சநிலையில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அவரின் ஆணவத்தை அடக்குகின்ற சக்தி அ.தி.மு.க. தொண்டர்களிடம் இருக்கிறது. நாங்கள் நாகரிகத்தோடு பேசி வருகிறோம். அவர்களைப்போல நாங்கள் பேசமாட்டோம். அ.தி.மு.க.வின் கொள்கை, குறிக்கோள்களுக்கு மாறாக நாங்கள் எப்போதும் நடக்க மாட்டோம். கூடிய விரைவில் மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து நீதி கேட்போம். நியாயம் கேட்போம். இனிமேல் தீர்ப்பை எங்கு பெற வேண்டுமோ அங்கு சென்று பெறுவோம். சசிகலா, டி.டி.வி.தினகரனை கூடிய விரைவில் சந்திப்பேன். எங்களுக்கு எந்த தொய்வும் ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேல்முறையீடு இல்லை

பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில், "எதை முன்னால் தீர்மானிக்க வேண்டுமோ அதைத் தீர்மானிக்காமல் பொதுக்குழு கூட்டியது செல்லும் என்றும், தீர்மானங்களைப் பற்றி நாங்கள் ஒன்றும் சொல்லமாட்டோம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு சொன்னது தங்களுடைய பொறுப்பை தட்டிக்கழித்துவிட்டது என்றே நினைக்கத்தோன்றுகிறது. சுப்ரீம் கோர்ட்டில் எங்களுடைய தரப்பு நியாயத்தை அவர்களுக்கு எடுத்து விளக்க போதுமான திறமை எங்களுக்கு இல்லை என்றே நாங்கள் நினைக்கிறோம். ஆனால், நியாயம் எங்கள் பக்கம் இருக்கிறது. கட்சியின் வக்கீல்கள் இதைச் சுட்டிக்காட்டி மீண்டும் நல்ல தீர்ப்பை பெறுவார்கள். பொதுக்குழு செல்லும் என்றுதான் தீர்ப்பு அளித்துள்ளது. பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக கோர்ட்டு எதுவும் சொல்லவில்லை. பொதுக்குழு வழக்கில் மேல்முறையீடு செய்ய மாட்டோம்" என்றார்.

அடுத்த மாதம் மாநாடு

மனோஜ் பாண்டியன் கூறுகையில், "சட்ட விதியை காப்பாற்றவே இந்த தர்மயுத்தம். இந்த பயணத்தின்போது பல தலைவர்களை சந்திக்க உள்ளோம். மார்ச் மாதத்தில் சேலம், கோவை என தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் மாநாடு நடத்த உள்ளோம்" என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தனது இல்லத்துக்கு வெளியே தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் அன்னதானம் வழங்கினார்.


Next Story