மின் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்


மின் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
x

மின் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

மத்திய அரசை கண்டித்து...

நாடாளுமன்றத்தில் மின்சார சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்ததை கண்டித்தும், அந்த மசோதாவை திரும்பப்பெற கோரியும், மத்திய அரசை கண்டித்தும் நேற்று நாடு முழுவதும் மின் ஊழியர்கள் தங்களது பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் பொறியாளர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் நேற்று தங்களது பணிகளை புறக்கணித்து அலுவலகம் முன்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுத்துறையாக பாதுகாக்க வேண்டும்

போராட்டத்திற்கு அனைத்து மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம், தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் கழகம், தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கம், ஏ.இ.எஸ்.யு. தொழிற்சங்கம், சென்னான் தொழிலாளர் சம்மேளனம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்தவர்களும் மற்றும் மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

அவர்கள் மத்திய அரசை கண்டித்தும், மின் துறையை பொது துறையாக பாதுகாத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

வெறிச்சோடிய அலுவலகங்கள்

இதையடுத்து அவர்கள் பணிக்கு செல்லாமல் அலுவலகத்தின் வளாகத்தில் அமர்ந்து தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் மின்வாரிய பிரிவு அலுவலகங்கள், துணை மின் நிலையங்களில் பணிபுரியும் பொறியாளர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் மின்வாரிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டதோடு, பணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டது.


Next Story