டி.என்.பாளையம் அருகே விவசாயியை மிதித்து கொன்ற காட்டு யானை


டி.என்.பாளையம் அருகே காட்டு யானை விவசாயியை மிதித்து கொன்றது.

ஈரோடு

டி.என்.பாளையம்

டி.என்.பாளையம் அருகே காட்டு யானை விவசாயியை மிதித்து கொன்றது.

காட்டு யானை

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ளது பெருமுகை ஊராட்சி வரப்பள்ளம். இந்த பகுதியில் பவானி ஆறு செல்கிறது. இந்த நிலையில் அந்தியூர் வனச்சரகத்துக்குட்பட்ட அத்தாணி வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வெளியேறியது. இந்த யானை வழித்தவறி அத்தாணி செம்புளிச்சாம்பாளையம், சேட்டுகாட்டுப்புதூர், கருப்பகவுண்டன் புதூர், ஓடமேட்டு பாலத்தின் பள்ளம் வழியாக நேற்று அதிகாலை பெருமுகை ஊராட்சி வரட்டுப்பள்ளம் பவானி ஆற்றங்கரையோரம் வந்து முகாமிட்டது.

விவசாய பணி

காட்டு யானையை பார்த்து அச்சம் அடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வனச்சரகர்கள் உத்திரசாமி, கணேஷ் பாண்டியன் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் காட்டு யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வரட்டுப்பள்ளம் ஆற்றங்கரையோரத்தில் இருந்து அடசபாளையம் பகுதிக்கு வந்தது.

இந்தநிலையில் அடசபாளையம் பகுதியில் விவசாய பணிக்காக பெருமுகை இரங்காட்டூர் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் சென்றனர். அவர்கள் அங்கு உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டு இருந்தனர். அவர்களை வனத்துறையினர் காட்டு யானை இந்த பகுதியில் முகாமிட்டுள்ளது. எனவே நீங்கள் இங்கு வேலை பார்க்க வேண்டாம் என்று கூறி உள்ளனர். இதில் 3 பேர் மட்டும் அங்கு இருந்து ெவளியேறி விட்டனர்.

மிதித்து கொன்றது

எனினும் பெருமுகை இரங்காட்டூர் கல்ட்ராமணி பகுதியை சேர்ந்த விவசாயி துரை என்ற சித்தேஸ்வரன் (வயது 54) என்பவர் விவசாய பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது காட்டுயானை விவசாய தோட்டத்துக்குள் புகுந்தது. இதைப்பார்த்த சித்தேஸ்வரன் தப்பி ஓட முயன்றார். ஆனால் அதற்குள் காட்டுயானை துதிக்கையால் அவரை பிடித்து தூக்கிப்போட்டு காலால் மிதித்து கொன்றது. பின்னர் அந்த யானை அங்கிருந்து சென்றது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பங்களாப்புதூர் போலீசார் இறந்த சித்தேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்ந்து வனத்துறையினர் காட்டு யானையை கண்டுபிடித்து, அதனை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story