கோபி அருகே விவசாயியை மிதித்து கொன்ற காட்டு யானையை பிடிக்க 2 கும்கிகள் வரவழைப்பு
கோபி அருகே விவசாயியை மிதித்து ெகான்ற காட்டு யானையை பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன.
டி.என்.பாளையம்
கோபி அருகே விவசாயியை மிதித்து ெகான்ற காட்டு யானையை பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன.
மிதித்து கொன்றது
கோபியை அடுத்த டி.என்.பாளையம் பெருமுகை அருகே அடசபாளையம் எரங்காட்டூர் கல்ராமணி பகுதியை சேர்ந்தவர் துரை என்கிற சித்தேஸ்வரன் (வயது 54). விவசாயி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் விவசாய பணிகளை ெசய்து கொண்டிருந்தார். அப்போது அந்தியூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட அத்தாணி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று நேற்று முன்தினம் அடசபாளையம் பகுதியில் இருந்த தோட்டத்துக்குள் புகுந்தது. அங்கு வேலை செய்து கொண்டிருந்த சித்தேஸ்வரனை மிதித்து கொன்றது.
இதுபற்றி அறிந்ததும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சித்தேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே சித்தேஸ்வரனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
சஞ்சீவராயன் கோவில் வனப்பகுதிக்கு...
இதனிடையே வனத்துறையினர் அங்கு வந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதன்படி அடசபாளையம், தண்ணீர்பந்தல், கல்ராமணி, குளத்துக்காடு வழியாக பெருமுகை சஞ்சீவிராயன் கோவில் அருகே உள்ள வனப்பகுதிக்குள் காட்டு யானையை வனத்துறையினர் விரட்டினர்.
மேலும் யானை மீண்டும் ஊருக்குள் வராமல் இருக்க பெருமுகை வனப்பகுதியையொட்டி வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வேறு இடத்தில் விடப்படும்
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 'விவசாயியை கொன்ற காட்டு யானையை பிடிக்க வனத்துறையினருக்கு அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து முதுமலை வளர்ப்பு முகாமில் இருந்து 2 லாரிகளில் பொம்மன், சீனிவாசன் என்ற 2 கும்கி யானைகள் நேற்று பெருமுகை பகுதிக்கு வரவைழக்கப்பட்டன.
பெருமுகைக்கு கொண்டு வரப்பட்ட 2 கும்கி யானைகளும் சஞ்சீவராயன் கோவில் பகுதியில் உள்ள உரம்புகிணறு மாரியம்மன் கோவில் பகுதியில் லாரியில் இருந்து இறக்கப்பட்டு உள்ளன. காட்டு யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். காட்டு யானையின் நடமாட்டம் தெரிந்ததும், 2 கும்கி யானைகள் உதவியுடன், அதை பிடித்து வேறு வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
மருத்துவ குழுவினர்
மேலும் ஓசூர், முதுமலை மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளில் இருந்து வன கால்நடை டாக்டர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சஞ்சீவிராயன் கோவில் வனப்பகுதிக்கு சென்று, அங்கு வனத்துறையினருடன் முகாமிட்டு உள்ளனர். காட்டு யானை பிடிக்கப்பட்டதும், அந்த யானையை ஏற்றி செல்ல தருமபுரி பகுதியில் இருந்து லாரியும் கொண்டு வரப்பட்டு உள்ளது.
தேவைப்பட்டால் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
விவசாயியை கொன்றது கருப்பன் யானையா?
தாளவாடி பகுதியில் 2 விவசாயிகளை கொன்றதுடன், அந்த பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து கரும்பு, வாழை, தென்னை போன்ற பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தி வந்த கருப்பன் யானை கடந்த மாதம் பிடிக்கப்பட்டது. பின்னர் அந்த கருப்பன் யானை அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ள பாலாற்று வனப்பகுதியில் விடப்பட்டது. இந்த நிலையில் கோபியை அடுத்த அடசபாளையத்துக்குள் புகுந்து சித்தேஸ்வரன் என்ற விவசாயியை மிதித்து கொன்றது கருப்பன் யானையாக இருக்குமோ என்ற சந்தேகம் விவசாயிகளுக்கு எழுந்து உள்ளது. எனினும் இதை வனத்துறையினர் உறுதிப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்