சத்தி அருகே வாகனங்களை வழிமறித்த காட்டு யானை


சத்தி அருகே வாகனங்களை வழிமறித்த காட்டு யானை
x

சத்தி அருகே வாகனங்களை வழிமறித்த காட்டு யானை

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் குறிப்பாக சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் காணப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் ரோட்டில் வடவள்ளியில் உள்ள தனியார் செண்டுமல்லி நிறுவனம் அருகே காட்டு யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனால் அந்த வழியாக கார், பஸ், லாரி, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. ரோட்டின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் வரிசையில் நின்றன.

அப்போது ஒரு சிலர் தங்களது செல்போன்களில் யானையை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க முற்பட்டனர். இதனால் ஆவேசமடைந்த யானை அவர்களை நோக்கி ஓடி வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து பின்னோக்கி ஓட்டம் பிடித்தனர். அதன்பின்னர் யானை நடுரோட்டில் வாகனங்களை வழிமறித்தபடி நின்றது. பின்னர் சிறிது நேரம் யானை ரோட்டில் அங்கும் இங்கும் நடமாடிவிட்டு் காட்டுக்குள் சென்றுவிட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, 'வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலைகளில் நடமாடும் காட்டு யானைகளின் அருகே யாரும் செல்லவோ, செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவோ கூடாது.' என்றனர்.


Next Story