ஆசனூர் அருகே குட்டியுடன் வந்து கரும்பு லாரியை வழிமறித்த காட்டு யானை


ஆசனூர் அருகே குட்டியுடன் வந்து கரும்பு லாரியை வழிமறித்த காட்டு யானை
x

ஆசனூர் அருகே குட்டியுடன் வந்து கரும்பு லாரியை காட்டு யானை வழிமறித்தது.

ஈரோடு

தாளவாடி

ஆசனூர் அருகே குட்டியுடன் வந்து கரும்பு லாரியை காட்டு யானை வழிமறித்தது.

கரும்பு லாரிகளை எதிர்பார்த்து

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் ஏராளமான காட்டு யானைகள் காணப்படுகின்றன.

வனப்பகுதி வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. வனப்பகுதியின் ஒரு பக்கத்தில் இருந்து மறுபகுதிக்கு அடிக்கடி காட்டுயானைகள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றன.

இதற்கிடையே அந்த வழியாக கரும்பு பாரம் ஏற்றிவரும் லாரி டிரைவர்கள் யானைகளுக்கு கரும்பு கட்டுகளை சாலையோரம் வீசிச்சென்று பழக்கப்படுத்திவிட்டார்கள். இதனால் கரும்புகளை ருசித்துவிட்ட யானைகள் கரும்பு லாரிகளை எதிர்பார்த்து அடிக்கடி நடுரோட்டிலேயே வந்து நின்றுவிடுகின்றன.

குட்டியுடன் வந்த யானை

இந்த நிலையில் நேற்று காலை தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றுகொண்டு இருந்தது. தமிழக-கர்நாடக எல்லையில் ஆசனூர் அருகே உள்ள காரப்பள்ளம் என்ற இடத்தில் சென்றபோது குட்டியுடன் ஒரு காட்டு யானை ரோட்டு ஓரத்தில் நின்றுகொண்டு இருந்தது.

கரும்பு லாரியை கண்டதும் குட்டியுடன் காட்டு யானை நடுரோட்டுக்கு ஓடிவந்து லாரியை மறித்தது. உடனே டிரைவர் லாரியை அப்படிேய நிறுத்திவிட்டு இறங்கி சற்று தூரத்தில் சென்று நின்றுகொண்டார்.

கரும்புகளை சுவைத்தது

இதையடுத்து காட்டு யானை குட்டியுடன் சேர்ந்து லாரியில் இருந்த கரும்புகளை அப்படியே துதிக்கையால் எடுத்து சுவைக்க தொடங்கியது. இதனால் அந்த வழியாக வந்த எந்த வாகனமும் செல்ல முடியாமல் அப்படியே நின்றன.

லாரியை வழிமறித்து குட்டியுடன் காட்டு யானை கரும்பு தின்ற காட்சியை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் செல்போனில் படம் பிடித்தனர்.

சுமார் 15 நிமிடங்கள் கரும்புகளை ஆசை தீர தின்ற பின்னர் காட்டு யானை குட்டியுடன் தானாக வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அதன்பின்னர் டிரைவர் லாரியை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். மற்ற வாகனங்களும் செல்ல தொடங்கின.


Next Story