ஆபாச படங்களை வெளியிடுவதாக என்ஜினீயரிங் மாணவிக்கு மிரட்டல்
ஆபாச படங்களை வெளியிடுவதாக என்ஜினீயரிங் மாணவிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது
காதல்
திருச்சி பொன்மலை கணேசபுரம் பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் திருச்சியில் உள்ள பிரபல என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், திருச்சியை சேர்ந்த தியாகராஜன் (வயது 27) என்பவரும், பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் தியாகராஜன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த அந்த மாணவி, தியாகராஜனுடன் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்திவிட்டார்.
ஆனால் அவர், தொடர்ந்து அந்த மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த மாதம் அந்த மாணவியை செல்போனில் தொடர்பு கொண்ட தியாகராஜன், அவரை தன்னுடன் வரும்படி கூறியுள்ளார். அவர் வர மறுக்கவே, உனது நிர்வாண படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டல் விடுத்ததுடன், அதை வெளியிடாமல் இருக்க ரூ.5 லட்சம் கேட்டுள்ளார். அந்த மாணவி, இதுபற்றி பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தியாகராஜனை வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
*திருச்சி தாராநல்லூர் வசந்தம் நகர் போஸ்டல் காலனியை சேர்ந்த முத்துராஜா(38) தனது வீட்டின் பின்பகுதியில் மாட்டு கொட்டகை வைத்து 15 பசுக்களை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று மாட்டு கொட்டகையில் பொருத்தப்பட்டிருந்த 3 மின்விசிறி மற்றும் 3 அலுமினிய பாத்திரங்கள் திருட்டு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாராநல்லூரை சேர்ந்த ஆனந்தை(24) கைது செய்தனர்.
*திருச்சி உறையூர் புதுபாய்க்கார தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(52), உறையூர் செவ்வந்தி பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் பிரவீன்குமார்(32) ஆகியோரின் ஆட்டோக்களில் இருந்த பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இது தொடர்பாக திருச்சி தாராநல்லூரை சேர்ந்த சிவக்குமாரை(24) போலீசார் கைது செய்து, 3 பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.
தற்கொலை
*திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்றது தொடர்பாக அரியமங்கலத்தை சேர்ந்த ரியாஸ்(23), திருவெறும்பூரை சேர்ந்த தமிழரசன் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
*முசிறி நடராஜ் நகரை சேர்ந்தவர் பானுமதி(45). இவரது கணவன் நடேசன் ஆறு மாதத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் துக்கம் தாளாமல் விரக்தியில் இருந்த பானுமதி் சம்பவத்தன்று களைக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பதாகை கிழிக்கப்பட்டதால் பரபரப்பு
*கொள்ளிடம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள அப்பாதுரையை சேர்ந்த ஒருவருக்கு அகிலாண்டபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது. இதையொட்டி, அப்பகுதி சாலை ஓரத்தில் பதாகை வைத்திருந்ததாக தெரிகிறது. இதற்கு, அகிலாண்டபுரத்தில் உள்ள ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை 2 பதாகைகள் கிழிக்கப்பட்டிருந்ததால் இரு தரப்பினர் இடையே ேமாதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக சமயபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசாருக்கும், ஒரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
*தா.பேட்டை அடுத்த கட்டணாம்பட்டி ஏரி குளத்தூர் கொட்டம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரனின் மனைவி குமாரத்தி(48). சம்பவத்தன்று வீட்டின் முன்பு கட்டிலில் படுத்து தூங்கினார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த தாலிச்சங்கிலியை பறித்து சென்றார்.
*வளநாட்டை அடுத்த முத்தாழ்வார்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(50). இவர் நேற்று துவரங்குறிச்சியில் உள்ள மதுரை சாலையில் மதுபான கடை அருகே உள்ள சாலையின் ஓரமாக மர்மமான முறையில் இறந்த நிலையில் கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
*சோமரசம்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் நேற்று இரவு 8.15 மணி முதல் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.
மலைப்பாம்பு பிடிபட்டது
*துவரங்குறிச்சி அருகே உள்ள செவந்தாம்பட்டி பிரிவு சாலையில் நேற்று இரவு மலைப்பாம்பு கிடந்தது. துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர் அங்கு வந்து, சுமார் 12 அடி நீள மலைப்பாம்பபை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
*திருச்சி புங்கனூர் பொன்னிநகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (41). இவர் தீரன் நகர் பஸ் நிறுத்த பகுதியில் தையல் கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று குணா என்பவரின் மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட சரவணன், அவரிடம் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த குணா, தனது உறவினர்களுடன் சென்று தையல் கடையை அடித்து, உடைத்து சூறையாடினர். அத்துடன் சரவணனையும் தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து செசன்சு கோர்ட்டு போலீசார் குணா உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.