பஸ்களில் பயணிகள் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பஸ்களில் பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று டிரைவர், கண்டக்டர்களுக்கு போலீஸ் துணை கமிஷனர் லாவன்யா அறிவுறுத்தினார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பஸ்களில் பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று டிரைவர், கண்டக்டர்களுக்கு போலீஸ் துணை கமிஷனர் லாவன்யா அறிவுறுத்தினார்.
கலந்தாய்வு கூட்டம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வாங்க மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் அதிகம் பேர் சேலம் மாநகர பகுதிக்கு வருகின்றனர். இதையொட்டி பயணிகளின் பாதுகாப்பு குறித்து தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று அன்னதானப்பட்டியில் போலீஸ் சமுதாய கூடத்தில் நடந்தது. போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி தலைமை தாங்கினார்.
ஒலி எழுப்ப கூடாது
போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா கலந்து கொண்டு பேசியதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிராமப்புற மக்கள் ஜவுளி எடுக்க டவுன் பகுதிக்கு வருவார்கள். இதனால் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிப்பதை குறித்து தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் உறுதிபடுத்த வேண்டும். குற்ற சம்பவங்கள் நடைபெற்றால் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அனைத்து தனியார் பஸ்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் அதிகம் பேர் சாலையில் நடந்து செல்வார்கள். எனவே மக்கள் கூட்டம் உள்ள பகுதிகளில் பஸ்களை மெதுவாக இயக்க வேண்டும். அதே போன்று அதிக ஒலி எழுப்பக்கூடாது.
இவ்வாறு துணை கமிஷனர் லாவண்யா கூறினார்.