ஈரோடு இடைத்தேர்தல் - ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்..!
ஈரோடு இடைத்தேர்தலில் 33 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க., தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் என 77 பேர் போட்டியிடுகின்றனர். பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
33 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கூடுதலாக போலீசாருடன் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இந்த பதற்றமான வாக்குசாவடிகள் முழுவதும் சி.சி.டி.வி. கேமிரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. மற்ற வாக்குச்சாவடிகளில் தேர்தல் அன்று வீடியோ பதிவு செய்யப்படுகிறது.
77 பேர் போட்டியிடுவதால் இந்த இடைத்தேர்தலில் ஒரு வாக்குச்சாவடிக்கு 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 1 கட்டுப்பாட்டு கருவி, 1 வி.வி.பேட் கருவி பயன்படுத்தப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2.27 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். நாளை மாலை 5 மணி முதல் பிரசாரம் நிறைவு பெறுகிறது. இதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் காலை 11 மணி முதல் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
தேர்தல் மண்டல அலுவலர்கள் இந்த பணிகளை கண்காணிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து 27-ந் தேதி காலை 6 மணிக்கு அந்தந்த முகவர்கள் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடைபெறும். பின்னர் பதிவான வாக்குகள் அழிக்கப்பட்டு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு முடிந்ததும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சித்தோட்டில் உள்ள ஐ.ஆர்.டி.டி பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அறைகளில் பெட்டிகள் வரிசையாக வைத்து பூட்டி சீல் வைக்கப்படும். இதனைத்தொடர்ந்து அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வீடியோ மூலம் கண்காணிக்கப்படும்.
அதனைத்தொடர்ந்து வரும் மார்ச் மாதம் 2-ந் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. மொத்தம் 16 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்படுகிறது. ஒரு அறையில் 10 மேஜைகளிலும் மற்றொரு அறையில் 6 மேஜைகளிலும் எண்ணப்படுகிறது. அன்று மாலை தேர்தல் முடிவுகள் வெளியாகும்.