விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படும்


விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படும்
x

விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

திருவாரூர்

கொரடாச்சேரி:

விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடை திறப்பு விழா

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் குளிக்கரை கிராமத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு ரேஷன் கடையை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

15 நாட்களுக்குள் குடும்ப அட்டை

தமிழகத்தில் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படும். தி.மு.க. ஆட்சிக்கு வந்து 14 மாதங்களில் 12 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளன.

பொதுவினியோக திட்டத்தின் கீழ் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மட்டுமில்லாமல் துவரம் பருப்பு 1 கிலோ, சக்கரை 1 கிலோ, பாமாயில் 1 லிட்டர் ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கு சிற்றுண்டி

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வாடகை கட்டிடத்தில் இயங்கும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆயிரம் குடும்ப அட்டைகள் மேல் உள்ள நியாயவிலை கடைகளை இரண்டாக பிரித்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சித்தலைவர் தலையாமங்கலம் பாலசுப்ரமணியன், துணைத்தலைவர் சேகர்.கலியபெருமாள், கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல திருத்துறைப்பூண்டியில் பாமணி மற்றும் சுந்தரபுரியில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்குகளை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார்.

திரவ ஆக்சிஜன் சேமிப்பு கலன்

முன்னதாக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் சேமிப்பு கலனை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்.

பின்னர் திருவாரூர் விளமலில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலளாளர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டார்.இதில் நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story