குறைகேட்பு கூட்டத்தில் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை விழுப்புரம் கலெக்டரிடம் விவசாயிகள் குற்றச்சாட்டு


குறைகேட்பு கூட்டத்தில் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை விழுப்புரம் கலெக்டரிடம் விவசாயிகள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 22 July 2023 12:15 AM IST (Updated: 22 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குறைகேட்பு கூட்டத்தில் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என விழுப்புரம் கலெக்டரிடம் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கி, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-

விவசாயிகள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் அளிக்கும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பெயரளவில் எங்களுக்கு பதில் தபால் மட்டுமே வருகிறது. ஆனால் அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

நேமூரில் மின்பற்றாக்குறை நீடித்து வருவதால் கூடுதல் மின்மாற்றி வைக்க வேண்டும். மழைக்காலத்திற்கு முன்பாக நந்தன் கால்வாய் மற்றும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். முக்குலம் கிராமத்தில் பெருமாள் கோவிலுக்கு செல்லக்கூடிய பாதை ஆக்கிரமிப்பை அகற்றிட வேண்டும்.

கடன் வழங்க மறுப்பு

தாட்கோ மூலம் ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்குவதாக கூறுகிறார்கள். ஆனால் ஆழ்துளை கிணறு அமைத்த பல விவசாயிகளுக்கு ஆண்டுக்கணக்கில் மானியம் வழங்கப்படவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் சவுக்கை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு சவுக்கை நாற்று கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மோட்சகுளம், வளவனூர் உள்ளிட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பணிபுரிவதால், தமிழ் தெரியாமல் அவர்களிடம் எங்களால் எதுவும் கேட்கமுடிவதில்லை. நகைக்கடனை மட்டும் வழங்கி விவசாயிகளுக்கான கடன்களை வழங்க மறுத்துவருகின்றனர். எனவே விவசாயிகளுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விதைகள் தட்டுப்பாடு

விழுப்புரம் மாவட்டத்தில் ஆடிப்பட்டத்திற்கு தடையின்றி விதைகளை வழங்கிட வேண்டும். மணிலா உள்ளிட்ட விதைகளும், விவசாயிகள் விரும்பும் நெல்ரக விதைகளும் கிடைப்பதில்லை. அதிகாரிகள் கூட்டத்தில் மட்டும் தட்டுப்பாடு இல்லை என்கிறார்கள். ஆனால் மாவட்டத்தில் விதைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வழங்காமல், வியாபாரிகளுக்கு விற்பனை செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் பெயரில் விதைகளை வியாபாரிகளுக்கு விற்பனை செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இவ்வாறு விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.

விசாரணைக்கு உத்தரவு

இதற்கு பதிலளித்து கலெக்டர் பழனி பேசுகையில், விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகுதியான மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டுள்ளன. தாட்கோ மானியம் 2018-ம் ஆண்டு வரை வழங்கப்பட்டுள்ளது. அடுத்துள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன்வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் போடப்பட்டு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தெரிவித்த வங்கிகள் மீது விசாரணை நடத்தப்படும். விதைகள் விற்பனையில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். அதனடிப்படையில் தவறு நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story