நாட்டுக்கோழி வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம்
கம்பம் பள்ளதாக்கு பகுதியில் நாட்டுக்கோழி வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கம்பம் பள்ளதாக்குப் பகுதியான குள்ளப்பகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட கிராமப்புற பகுதியில் பாரம்பரிய உணவு வகைகளான சாமை, வரகு, குதிரைவாலி, கேழ்வரகு போன்ற தானிய வகைகளை உட்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதேபோல் நாட்டுக்கோழிக்கும் தற்போது நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகளிடம் கேட்டபோது, நாட்டுக்கோழிக்கு நல்ல விலை கிடைப்பதால் ஆடு, மாடுகளுக்கு அடுத்தபடியாக நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோம். கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு சிறந்த தொழிலாகும். நாட்டுக்கோழிகளை திறந்தவெளி மேய்ச்சல் முறையில் வளர்க்கும்போது, புழு, பூச்சி, தானியங்கள், இலை, தழைகளை உணவாக உண்கிறது. நாட்டுக்கோழிகள் வளர்வதற்கு 200 நாட்கள் ஆகின்றன. நாட்டுக்கோழியில் கொழுப்பு சத்து குறைவாகவும், புரத சத்து அதிகமாகவும் உள்ளதால் அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர். கால்நடைத்துறை அதிகாரிகள் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து ஆலோசனை மற்றும் நோய் தாக்குதலை தடுக்க ஆலோசனைகள் வழங்கினால் உற்பத்தி அதிகரிக்கும் என்றனர்.