அரசு பஸ்சை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்


அரசு பஸ்சை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்
x

கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்

நயினார்கோவில்,

கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.

மேலநாட்டார்கால்வாய் அடைப்பு

பரமக்குடி வைகை ஆற்றில் இருந்து பெரும்பச்சேரியில் இருந்து ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு மேல நாட்டார் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் இளமனூர் வழியாக நயினார்கோவிலை சுற்றியுள்ள 23 கண்மாய்களுக்கு சென்று இறுதியில் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயை அடைகிறது. கிட்டத்தட்ட 30 கி.மீ. தூரம் பயணிக்கிறது.

இந்த கால்வாயை நம்பி சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன் பெறுகிறார்கள்.

தற்போது தொடர் மழையின் காரணமாக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பரமக்குடி வைகை ஆற்றில் இருந்து மேலநாட்டார் கால்வாயிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மேலநாட்டார் கால்வாய் ஆரம்பிக்கும் 2 கி.மீ. ெதாலைவில் உள்ள இளமனூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர் கால்வாய் தடுப்பணை மீது மண்குவியலை ஏற்படுத்தி, கால்வாயின் மறுபுறம் தண்ணீர் செல்லாமல் அடைத்ததாக தெரிகிறது.

விவசாயிகள் மறியல்

இதனால் பாதிக்கப்பட்ட நயினார்கோவில், தாளயடிக்கோட்டை, வாணியவல்லம்,தரைமேல்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கிராம விவசாயிகள் பெரும்பச்சேரி அருகே அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து நேற்று காலை 8 மணிக்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் பலர் மண்வெட்டியுடன் சாலையில் அமர்ந்து தங்கள் கிராமத்துக்கு கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளும், போலீசாரும் மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கால்வாயில் அடைக்கப்பட்ட மண்குவியலை அகற்றி தண்ணீர் விட ஏற்பாடு செய்தனர். இதன் பிறகு விவசாயிகள் தங்கள் மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story