வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடுவதை தாமதப்படுத்த வேண்டும் - விவசாயிகள்


வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடுவதை தாமதப்படுத்த வேண்டும் - விவசாயிகள்
x

உளுந்து, பருத்தி பயிர்களை காப்பாற்ற வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடுவதை தாமதப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தஞ்சாவூர்

மெலட்டூர்:-

உளுந்து, பருத்தி பயிர்களை காப்பாற்ற வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடுவதை தாமதப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளது.

தண்ணீர் திறப்பு

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். ஆனால் இந்த ஆண்டு மே மாதம் 24-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

மேட்டூரில் இருந்து கல்லணை வந்த தண்ணீர் மே மாதம் 27-ந் தேதி காவிரி, வெட்டாற்றில் திறக்கப்பட்டது. கிளை ஆறுகளிலும் பாசனத்துக்கான தண்ணீர் திறந்து விடப்பட்டு, விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அறுவடை

தஞ்சை மாவட்டம் பாபநாசம், மெலட்டூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கோடை பருவத்தையொட்டி பருத்தி மற்றும் உளுந்து பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த கோடை சாகுபடி பயிர்கள் இன்னும் அறுவடை காலத்தை எட்டவில்லை. உளுந்து அறுவடைக்கு இன்னும் ஒருமாத காலம் ஆகும்.

அதேபோல பருத்தி அறுவடைக்கு 2 மாத காலம் ஆகும். இந்த நிலையில் வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டால், கோடை காலத்தில் பயிரிடப்பட்ட உளுந்து, பருத்தி ஆகிய பயிர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கூறுகிறார்கள்.

தாமதப்படுத்த வேண்டும்

எனவே பருத்தி, உளுந்து போன்ற கோடை சாகுபடி பயிர்களை காப்பாற்ற ஆறுகளில் இருந்து பாசனத்துக்காக தெற்குராஜன் வாய்க்கால், பொன்மான்மேய்ந்த நல்லூர் வாய்க்கால், அரையபுரம் வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடப்படுவதை தாமதப்படுத்த வேண்டும் என கோடை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story