குறுவை பயிருக்கு காப்பீடு வழங்கப்படுமா?- விவசாயிகள்


குறுவை பயிருக்கு காப்பீடு வழங்கப்படுமா?- விவசாயிகள்
x

மழையால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் குறுவை பயிருக்கு காப்பீடு வழங்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

நாகப்பட்டினம்

மழையால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் குறுவை பயிருக்கு காப்பீடு வழங்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

குறுவை சாகுபடி

டெல்டா மாவட்ட குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப் படுவது வழக்கம். ஆனால் நடப்பாண்டு குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து மே மாதமே தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நாகை மாவட்டத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நடப்பாண்டு நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடி 70 ஆயிரம் ஏக்கரில் நடைபெற்று வருகிறது.

உரத்தட்டுப்பாடு

குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், உரத்தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், யூரியா மற்றும் டி.ஏ.பி. உரங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் தனியார் நிறுவனங்கள், உரத்துடன் சேர்த்து ரூ.300 முதல் ரூ.500 வரை விவசாயிகளுக்கு தேவையில்லாத இடுபொருளையும் வற்புறுத்தி விற்பனை செய்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து ஒரத்தூரை சேர்ந்த சின்னசாமி என்ற விவசாயி கூறுகையில், 'தமிழகத்தில் குறுவை தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 25 நாட்களான குறுவை பயிருக்கு ஏக்கருக்கு ஒரு மூட்டை டி.ஏ.பி., அரை மூட்டை யூரியா கலந்து இட வேண்டும். இல்லை என்றால் மகசூல் பாதிக்கப்படும்.

காப்பீடு

எனவே குறுவை தொகுப்பு திட்டம் நடைமுறையில் இருந்தாலும், வழக்கம் போல் உரங்களை விற்பனை செய்ய கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு உத்தரவிட வேண்டும். குறுவை சாகுபடிக்கு காப்பீடு கிடையாது என்கிறார்கள். விவசாயிகள் மீது அக்கறை கொண்ட இந்த அரசு, குறுவைக்கு காப்பீடு கிடைக்க உத்தரவிட வேண்டும்' என்றார்.

நாகை பாலையூரை சேர்ந்த தமிழ்செல்வன் என்ற விவசாயி கூறுகையில், 'தமிழகத்தில் 135 சதவீதம் அளவிற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. திருச்சி, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்யக்கூடிய மழைநீர் நாகை மாவட்டத்தில் உள்ள வடிகால் ஆறு மற்றும் வாய்க்கால் வழியாக கடலில் கலக்கிறது. இதனால் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. எனவே குறுவை பயிர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. நடப்பாண்டு, அதிகளவில் குறுவை சாகுபடி செய்துள்ளதால், அரசு குறுவை பயிருக்கு காப்பீடு வழங்க வேண்டும்' என்றார்.


Next Story