27 ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடக்கும் மறவமங்கலம் கால்வாய் திட்டம்-செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை


27 ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடக்கும் மறவமங்கலம் கால்வாய் திட்டம்-செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 18 March 2023 6:46 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் 27 ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடக்கும் மறவமங்கலம் விரிவு கால்வாய் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை


சிவகங்கை மாவட்டத்தில் 27 ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடக்கும் மறவமங்கலம் விரிவு கால்வாய் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரூ.20 கோடி வீண்

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ள பகுதி மறவமங்கலம். இங்கு கிணற்று பாசனமும், மழை நீரும் தான் விவசாயத்திற்கு பயன்பட்டு வருகிறது. இதனால் சிவகங்கை பகுதி வரை வரும் முல்லை பெரியாறு விரிவு பாசன கால்வாய் திட்டத்தில் மறவமங்கலம் வரை நீட்டிக்க அரசு முடிவு செய்தது. 1991-ல் இருந்து 96 முடிய உள்ள காலத்தில் சிவகங்கையில் இருந்து கால்வாய் அமைக்கப்பட்டது.

அதன்படி சிவகங்கை காஞ்சிரங்கால் பகுதியில் இருந்து கூத்தாண்டன், ஊத்திகுளம், நெடுங்குளம், செங்குளம், சாத்தரசன்கோட்டை, அதப்படக்கி, சிரமம் வழியாக மறவமங்கலம் பெரிய கண்மாய்க்கு செல்லும் வகையில் சிமெண்டு கால்வாய் அமைக்கப்பட்டது. சுமார் ரூ.20 கோடிக்கு மேல் செலவிட்டு அமைக்கப்பட்ட இந்த கால்வாயில் இதுவரை தண்ணீர் வராமல் உள்ளது. இதனால் அரசு நிதி வீணானதோடு, மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை. இது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை பார்க்கலாம்.

நினைவு சின்னம்போல்

அர்ச்சுனன் காவிரி, வைகை, கிருமால், குண்டாறு, பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் சிவகங்கை:- முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மாவட்டத்தில் சுமார் 10,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. லெசீஸ் கால்வாய், ஷீல்டு கால்வாய், 48-வது மடை கால்வாய், கட்டாணி பட்டி கால்வாய், மாணிக்கம் கால்வாய், சிங்கம்புணரி நீட்டிப்பு கால்வாய் மூலம் பயன்பட்டு வருகின்றன.

மறவமங்கலம் பகுதி விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் முல்லைப் பெரியாறு விரிவு கால்வாயில் இருந்து சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்கால் பகுதியில் இருந்து சுமார் 31 கிலோமீட்டர் தொலைவிற்கு கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால் கால்வாய் 27 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. மேலும் கால்வாய் அமைக்க பயன்படுத்திய சிமெண்டு ஸ்லாப்புகளை பல இடங்களில் எடுத்து சென்று விட்டனர். தற்போது இந்த கால்வாய் நினைவு சின்னம்போல காட்சியளிக்கிறது. இக்கால்வாயில் தண்ணீர் வந்தால் மறவமங்கலம் கண்மாய் நிரம்பி 10-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில் தண்ணீர் செல்லும் வழியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கண்மாய்களும் நிரம்பும். இதன்மூலம் 7000 ஏக்கர் பாசன வசதி பெறும். மறவமங்கலம் விரிவாக்க பகுதியை சீரமைத்து தண்ணீர் வழங்க வலியுறுத்தி மதுரையில் உள்ள முல்லைப் பெரியாறு மண்டல தலைமை பொறியாளர் அலுவலகத்திற்கு நடை பயணம் செல்ல திட்டமிட்டுள்ளோம்.

விவசாயத்தை காக்க வேண்டும்

அன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர் மறவமங்கலம்:- மறவமங்கலம் பகுதி விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காக முல்லை பெரியாறு அணையின் விரிவு கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் பயன்பாட்டுக்கு வந்திருந்தால் இந்த பகுதி விவசாயிகளுக்கு மிக பயனுள்ளதாக இருந்திருக்கும். எனவே, முல்லைப் பெரியாறு அணையின் விரிவு கால்வாயான மறவமங்கலம் கால்வாயை சீரமைத்து தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருணாநிதி, விவசாய சங்க மாவட்ட தலைவர் மறவமங்கலம்:- மங்கள நாடு என்று அழைக்கப்படும் மறவமங்கலம் பகுதி முழுக்க வானம் பார்த்த பூமி ஆகும். மழையை நம்பி ஒருபோகம் நெல் விதைப்பு மட்டும் நடைபெறுகிறது. கிணற்று பாசனமும் அதிகமாக இல்லை.

இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் விரிவு கால்வாயாக அமைக்கப்பட்டுள்ள மறவமங்கலம் கால்வாயில் தண்ணீர் வந்தால் நிலங்களை சுத்தம் செய்து விவசாயம் செய்வோம். விவசாயத்தை காப்பதற்கு அரசு முன் வர வேண்டும்.


Next Story