விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
x

விளாத்திகுளம் அருகே விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் பஸ்நிலையம் முன்பு, வட்டார கரிசல் பூமி விவசாயிகள் சார்பில், 2020-2021 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகையை வழங்கக்கோரி சுமார் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளை ஏந்தியவாறு தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது 2020-2021 ஆம் ஆண்டிற்கான உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், கொத்தமல்லி, மிளகாய், வெங்காயம், சூரியகாந்தி, சோளம் மற்றும் பருத்தி போன்ற பயிர்களுக்கான காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு விதை மானியம், உழவு மானியம், உரம் மானியம், உள்ளிட்டவை பணமாக வங்கி கணக்கிற்கு அரசால் விடுவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போதைய அரசு பணத்திற்கு மாற்றாக இடுபொருள் என்ற பெயரில் பயன்படாத உரம் வழங்குவதை கைவிட்டு, பழைய நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும், விவசாய விளை பொருட்களுக்கு தமிழக அரசு விதித்துள்ள சுங்கவரியை திரும்ப பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் விளாத்திகுளம் தாசில்தார் சசிகுமாரிடம் விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story