வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் கருத்து


தமிழக சட்டசபையில் நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

விருதுநகர்

தமிழக சட்டசபையில் நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

மிளகாய் மண்டலம்

ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிளகாய் பயிரிடப்படுகிறது. இதன் பரப்பை 40 ஆயிரம் எக்டேராக உயர்த்தி, உற்பத்தியை அதிகரிக்க இம்மாவட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, 5 ஆண்டுகளில் மிளகாய் மண்டலமாக மாற்றப்படும். மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மல்லிகை பயிர் வேளாண்மை முறைகளை விவசாயிகளுக்கு கற்றுத்தரவும் ரூ.7 கோடி நிதி ஒதுக்கி மதுரை மல்லிகை இயக்கம் என்ற திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

கூடுதல் பலன்

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

திருச்சுழி அருகே உள்ள பி. தொட்டியாங்குளத்தை சேர்ந்த பாலகணேஷ்:- மதுரை மல்லிகைக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. இந்த மல்லிகையை நம்பி எண்ணற்ற விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில் மல்லிகை சாகுபடியை மேம்படுத்த நிதி ஒதுக்கியதுடன், மதுரை மல்லிகை இயக்கத்தை அறிவித்ததை வரவேற்கிறேன். இதன்மூலம் எண்ணற்ற விவசாயிகள் பயன்பெறுவர். இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு கூடுதல் பலனை தரும்.

சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு

காரியாபட்டி அருகே உள்ள வல்லப்பன்பட்டி சுப்பையா:-

காரியாபட்டி தாலுகா ஆவியூர், அரசகுளம், குரண்டி, கே.செவல்பட்டி, வல்லப்பன்பட்டி, எஸ்.தோப்பூர், கழுவனச்சேரி, எஸ்.கல்லுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் மல்லிகை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மல்லிகை பூ ஒரு சில காலங்களில் மட்டுமே கூடுதல் விலைக்கு விற்பனையாகிறது. ஒரு சில நேரங்களில் விலை கிடைப்பதில்லை. இந்தநிலையில் தமிழக அரசு பட்ஜெட்டில் மதுரை மல்லிகை இயக்கம் அறிவித்ததை வரவேற்கிறேன். இதன் மூலம் சாகுபடி பரப்பு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.

பயன் அளிக்குமா?

தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் பேர் நாயக்கன்பட்டி நாராயணசாமி:-

மருத்துவ குணம் கொண்ட மிளகாய்க்கு விருதுநகர் மாவட்டம் மிளகாய் மண்டலமாக அறிவித்ததற்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிேறன். இந்த அறிவிப்பு விருதுநகர் மாவட்டத்திற்கு எந்த வகையில் பயன் அளிக்கும் என்பது தெரியவில்லை. விருதுநகர் மாவட்டத்தை விட தூத்துக்குடியில் அதிக அளவில் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. எனவே விவசாயிகள் சங்கம் சார்பாக விளாத்திகுளத்தை தலைமையிடமாக வைத்து மண்டலம் அறிவிக்க வேண்டும் என ஏற்கனவே பலமுறை கோரிக்கை வைத்தோம்.

தமிழக அரசுக்கு நன்றி

கன்னி தேவன்பட்டி வெங்கடேஷ்:- ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தநிலையில் மிளகாய் மண்டலம் அறிவிப்பை வரவேற்கிறோம். வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை முழுமையாக செயல்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மிளகாய் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story