மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல்


மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல்
x

மத்திய அரசை கண்டித்து திருவாரூர் மாவட்ட பகுதிகளில் விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

மத்திய அரசை கண்டித்து திருவாரூர் மாவட்ட பகுதிகளில் விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் 13 மாதங்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கொண்ட மத்திய அரசு கடந்த 7 மாதங்களாக கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன.

இதன் ஒரு பகுதியாக திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள், மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம், இயற்கை உழவர் இயக்க மாவட்ட நிர்வாகி வரதராஜன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பவுன்ராஜ், நாகராஜன், சேகர், தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த சாலைமறியல் காரணமாக அங்கு அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி

டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதை அமல்படுத்த மறுக்கும் மத்திய அரசை கண்டித்து திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகே விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர் உலகநாதன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் குமாரராஜா, விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் சுவாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குடவாசல்

அதேபோல் குடவாசலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் டெல்லியில் போராடிய விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நடைமுறைப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் நடந்தது.

போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க குடவாசல் ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்க பொருளாளர் மருதவாணன், மாவட்ட தலைவர் கலைமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக குடவாசல்-திருவாரூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வலங்கைமான்

வலங்கைமானில் அகில இந்திய ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக உத்தரவாதம் அளித்த மத்திய அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது. இதற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ராதா, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் கலியபெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மன்னார்குடி

மன்னார்குடி கீழப்பாலம் பகுதியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் சதாசிவம், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் வீரமணி, முன்னாள் நகர செயலாளர் கலைச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொரடாச்சேரி

கொரடாச்சேரியில் நடந்த சாலை மறியல் காரணமாக திருவாரூர்- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூரில் உள்ள, லெட்சுமாங்குடி பாலத்தில், விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு விவசாய சங்க நகர தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். இதில், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் முருகேசு மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.


Next Story